கொபானி நகருக்குள் ஐ.எஸ். தீவிரவாதிகள் நுழைந்தனர் ராணுவத்துடன் கடும் சண்டை
சிரியாவில் 5 மாதங்களுக்கு பின்னர் கொபானி நகருக்குள் ஐ.எஸ். தீவிரவாதிகள் நுழைந்தனர். அங்கு அவர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை ந...

சிரியாவில் 5 மாதங்களுக்கு பின்னர் கொபானி நகருக்குள் ஐ.எஸ். தீவிரவாதிகள் நுழைந்தனர். அங்கு அவர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
கொபானி நகர்
சிரியாவில் துருக்கி எல்லையில் உள்ள கொபானி நகரில் குர்து இன மக்கள் பெரும்பான்மையினர் ஆவார்கள். 2012–ம் ஆண்டு, சிரிய ராணுவம் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டபின்னர் அந்த பகுதியை குர்து இன தலைவர்கள் நிர்வகித்து வந்தனர்.
அந்த நகரை பிடித்து விட வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் விரும்பினர். அதற்காக அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கே மிகப்பெரிய தாக்குதலை தொடுத்தனர். அதன் விளைவாக ஒரு லட்சம் குர்து இன மக்கள் உயிருக்குப் பயந்து, துருக்கிக்கு ஓட்டம் பிடித்தனர். அதுமுதற்கொண்டு அந்த நகரின் பெரும்பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிப்பு
ஆனால் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க கூட்டுப்படைகளின் ஆதரவுடன் குர்து படைகள், கொபானியை மீண்டும் பிடித்தனர். அதைத் தொடர்ந்து கொபானி நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் முழுமையாக விரட்டியடிக்கப்பட்டனர்.
அது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது. தொடர்ந்து குர்து இன படையினரிடம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தோல்வியையே ருசித்து வந்தனர்.
மீண்டும் நுழைந்தனர்
ஆனால் இப்போது 5 மாதங்களுக்கு பின்னர் கொபானி நகருக்குள் மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள் நுழைந்து விட்டனர்.
நேற்று அவர்கள் அங்கு ஒரு கார் குண்டுவெடிப்பை நடத்தினர். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அது மட்டுமின்றி அங்கு 3 திசைகளில் இருந்தும் அவர்கள் தாக்குதல் தொடுத்தனர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். அங்கு தொடர்ந்து ராணுவத்துடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்றொரு நகர்
இதற்கிடையே சிரியாவின் வட கிழக்கு நகரமான ஹசாக்காவின் முக்கிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி, தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதை சிரியாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறி உள்ளது.
ஆனால் சிரிய ராணுவம் இதை மறுத்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியை முறியடித்து விட்டதாக ராணுவ தரப்பு கூறுகிறது.
பலம் அடைகிறார்கள்
மேலும், சிரியாவின் தென்பகுதி நகரமான டேராவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்துள்ளனர். அரசு படைகளுக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே அங்கு உக்கிரமான சண்டை நடந்து வருகிறது.
சமீப காலமாக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.