சிறிலங்காவுக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
சிறிலங்காவுக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமென்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13ஆம் திகதி சிறிலங்கா செல்லவுள்ளார்.
இது தொடர்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் இந்திய பிரதமர் 14ஆம் திகதி வரையிலும் சிறிலங்காவில் தங்கியிருப்பார்.
இந்தியப் பிரதமரை வரவேற்கும் வகையில் விசேட வைபவமொன்று நடத்தப்படும். அத்துடன் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் படையினரால் பீரங்கி வேட்டுகளும் தீர்க்கப்படும். அதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்.
பின்னர் சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் இந்தியப் பிரதமர் சிறப்பு உரையாற்றுவார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். கலாசார மத்திய நிலையத்தை மக்களின் பாவனைக்காக கையளிப்பார்.
அதுமட்டுமன்றி இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளில் சில வீடுகளையும் அவர் பயனாளிகளிடம் கையளிப்பார்.
இதேவேளை மன்னார் விஜயத்தின் போது கொழும்பு - மதவாச்சி ஊடாக தலைமன்னாருக்கான ரயில் சேவையையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.