மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையா!? குழப்பத்தில் கொழும்பு
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், அது தொடர்பான இழுபறி நிலை...


சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், அது தொடர்பான இழுபறி நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
மஹிந்தவுக்கான வேட்புமனு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி செய்வாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.
இந்நிலையில் மஹிந்தவுக்கு ஆதரவாக அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மஹிந்தவுக்கு பங்கேற்பதாக இருந்தது. எனினும் வேட்புமனு தொடர்பில் நிலவும் சந்தேகங்களை அடுத்து, கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மஹிந்த அனுமதி அளிக்கப்பட்ட பின்னர், அவருக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரியை ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி அநுராதரபுத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் மைத்திரியும் கலந்து கொள்வார் என மஹிந்த அணியால் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் மஹிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் பங்கேற்க மைத்திரி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே அநுராதபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
கூட்டம் பிற்போடப்பட்டுள்ளமையை மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை அனுராதபுரத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் பங்கேற்கும் திட்டம் ஏதும் மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கவில்லை என்றும் சிறிலங்கா ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மஹிந்தவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தாலும், அவருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்வதில்லை என்பதில் மைத்திரி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடுகள் மஹிந்த தரப்புக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் அனுராதபுர கூட்டம் இடைநிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உண்மையிலேயே இடமளிக்கப்படுமா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.
சிலவேளைகளில் அவ்வாறு போட்டியிட முடியாத நிலை எற்பட்டதால், மாற்று அணியாகப் போட்டியிடும் ஏற்பாடுகளை மகிந்த தரப்பு மேற்கொண்டு வருகிறது. இதற்காக வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையிலேயே, எதிர்வரும் 13ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் வரை நிச்சயமாக எதையும் கூற முடியாது என்பதாலேயே, மஹிந்தவுக்கு ஆதரவான அனுராதபுர கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.