குர்ஆன் அவமதிப்பு வழக்கு
அடுத்த தவணைக்கு முன் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க உத்தரவு புனித குர்ஆனை அவமதித்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த...


அடுத்த தவணைக்கு முன் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க உத்தரவு
புனித குர்ஆனை அவமதித்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தி தொடரப்பட்டிருந்த வழக்கும் மற்றும் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஜாதிக பல சேனா அமைப்பின் ஊடக மாநாட்டினுள் பலாத்காரமாக பிரவேசித்து குழப்பம் விளைவித்ததாக ஞானசார தேரர் மீதும் மற்றும் 6 பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் தொடரப்பட்டிருந்த வழக்கும் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்டது.
கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இவ்வழக்குகள் விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்டபோது பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் ஏனைய சந்தேக நபர்களும் ஆஜராகியிருந்தனர்.
சம்பவம் நிகழ்ந்தபோது தொலைக்காட்சி ஊடகங்களினால் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவு ஆய்வுகளுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் இதுவரை அது தொடர்பான அறிக்கையை அனுப்பி வைக்கவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
நீதிவான் ஒளிப்பதிவு அறிக்கையைப் பெற்றுக் கொண்டு அடுத்த விசாரணைத் தவணைக்கு முன்பு குற்றப் பத்திரிகையைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டதுடன் விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
வாதிகள் தரப்பில் RRT சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.