ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதே!– டிலான் பெரேரா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் சரியானதே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீ...


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் சரியானதே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதே.
கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைய கட்சியின் தலைவரினால் கட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமையை ரத்து செய்ய முடியும்.
எனினும் கட்சியின் மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்திருந்தால், இந்த தீர்மானம் இன்னமும் ஜனநாயக ரீதியானதாக அமைந்திருக்கும்.
மத்திய செயற்குழுவில் இது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டிருந்தால் நூற்றுக்கு நூற்றி தொன்னூறு வீதம் ஏகமனதாக, ஐந்து பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தப்பட்டிருக்கும்.
இதன்படி, ராஜித சேனாரட்ன, எம்.கே.டி.எஸ். குணவர்தன, அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி நாவின்ன மற்றும் ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோர் கட்சியில் வகித்து வந்த அனைத்து பதவிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த ஐவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.