பாராளுமன்ற கலைப்பு இழுபறி நிலையில்! பிரதமர் – முஸ்லிம் அமைச்சர் சந்திப்பு!!
பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் பாராளுமன்ற கலைப்பு என்பது...


பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன் கிழமை பாராளுமன்றத்தில் வைத்து இந்த விடயத்தை முஸ்லிம் அமைச்சர் ஒருவரிடம் சுட்டிக்காட்டியிருப்பதாக நம்பகரமாக எமது சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்திற்கு தெரியவருகின்றது.
பாராளுமன்றத்தில் வைத்து இன்று காலை பிரதமரை தனியாக சந்தித்த குறித்த முஸ்லிம் அமைச்சர் ‘ பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கபடுமா?’ என வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ‘ பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கின்றேன். ஆனால் ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்ற கலைப்பு விடயத்தில் இந்த நிமிடம் வரை பின்வாங்கிச் செல்லும் சூழ்நிலையே காணப்படுகின்றது.
சுதந்திரக் கட்சி சார்பானவர்கள் பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுவதை விரும்புவதாக தெரியவில்லை.
இருந்த போதிலும் பாராளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் நான், இன்று நள்ளிரவு வரையும் அதற்கான அழுத்தத்தை ஜனாதிபதிக்கு கொடுத்துக் கொண்டேயிருப்பேன் எனறும் குறித்த முஸ்லிம் அமைச்சருக்கு பிரதமர் மேலும் பதிலளித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட பிரமுகரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்திற்கு தெரியவருகின்றது.
சுசிலின் அமெரிக்க விஜயத்தின் மூலம் பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்ற விடயம் சற்று சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பிரமுகர் ஒருவர் எமது இணையத்திற்கு பிரத்தியேகமாக சுட்டிக் காட்டினார்.
இதேவேளை இன்று பாராளுமன்றத்தில் பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த சபாநாயகர்,
‘பாராளுமன்றம் நாளை கலைக்கப்படாவிட்டால் உங்கள் கேள்விக்கு பதிலளிப்பேன்’ என்று கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும் பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்பதில் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி பெரும்பாலான ஊடகங்களும் நம்பிக்கை கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.