உள்நாட்டில் ஐ.எஸ். அச்சுறுத்தலில்லை
இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு; புலனாய்வுப் பிரிவு உஷார் நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் எத்தகைய செயற்பாடுகளும் உள்...

_insurgents,_Anbar_Province,_Iraq.jpg)
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் எத்தகைய செயற்பாடுகளும் உள்நாட்டில் இல்லை. அது தொடர்பிலான அச்சுறுத்தல்களும் இதுவரை இலங்கைக்குள் இல்லை.
எனினும் நாடளாவிய ரீதியில் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் கூடிய எச்சரிக்கைகளும் தொடர்ந்தும் இருக்கும் எனவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் உள்ளதாகவும் அது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் கடும்போக்கு அமைப்புக்கள் கூறிவரும் நிலையில் அது தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளரை கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சிரியாவில் இலங்கையர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்து போரிட்டு மரணமடைந்த செய்தியின் பின்னர் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் செயற்பாடுகள் உள்ளதாக சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
எனினும் அத்தகைய பயங்கரவாத குழுவொன்றின் அல்லது அமைப்பொன்றின் அச்சுறுத்தலோ செயற்பாடோ எமது நாட்டுக்குள் இது வரை இல்லை. எமது புலனாய்வாளர்களும் படையினரும் தேசிய பதுகாப்பு விடயத்தில் மிகவும் அவதானமாகவே உள்ளனர்.
இலங்கையர் ஒருவர் சிரியாவில் குறித்த பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து போரிட்டு மரணமானமை குறித்து பொலிஸார் பிரத்தியேக விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவானது மிகவும் அவதானத்துடனேயே உள்ளது.
இதுவரை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் எமக்கில்லை.
அது தொடர்பில் நாம் மிகவும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.