பொரளை பள்ளி தாக்குதல்
சந்தேக நபர்களான இரு பிக்குகளை கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு பொரளை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் தேட...

பொரளை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களான பௌத்த குருமார் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு 2 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொலிஸாருக்கு நேற்று உத்தரவு வழங்கினார்.
பொரளை பள்ளிவாசல் கல்வீச்சு தாக்குதல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவினை வழங்கினார்.
இச் சம்பவம்தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை மாதகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் நேற்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மூவரையும் பிணையில் விடுமாறு வாதிட்டனர். சந்தேக நபர்களில் ஒருவரின் மனைவி கர்ப்பிணியாக இருப்பதாகவும் சந்தேக நபரில் ஒருவர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. (உ/த) பரீட்சை எழுதும் மாணவர் எனவும் அடுத்த சந்தேக நபர் சுகயீனமாக இருப்பதாகவும் தெரிவித்து பிணை வழங்குமாறு நீதிவானைக் கோரியதற்கிணங்கவும் பள்ளிவாசல் நிர்வாக சபையினர் சார்பில் ஆஜரான RRT சட்டத்தரணிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காததாலும் நீதிவான் மூன்று சந்தேக நபர்களையும் பிணையில் விடுதலை செய்தார்.
பொரளை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் இரு பௌத்த தேரர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைத் தேடியும் அவர்கள் அங்கு இருக்கவில்லை எனவும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தின் பின்னணியில் ஒரு அமைப்பும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பிரபலமான நபர் ஒருவரும் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பொலிஸார் ஏற்கனவே நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொரளை பள்ளிவாசல் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி இரவு கல்வீச்சு தாக்குதலுக்குள்ளானது. பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள நிறுவனமொன்றின் சி.சி.ரி.வி. யின் பதிவுகளை ஆய்வு செய்து நாரஹேன்பிட்டிய பொலிஸார் கடந்த மாதம் 15 ஆம் திகதி இரு சந்தேக நபர்களைக் கைது செய்து 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு பின் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மூன்றாவது சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்த பின் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மூன்று சந்தேக நபர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பள்ளிவாசல் மீது கல் எறிந்ததாக பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விசாரணை எதிர்வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பள்ளிவாசல் நிர்வாக சபையின் சார்பில் RRTஅமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.