இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை கோரியது மன்று
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பிலான இறுதியான பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி ...


பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பிலான இறுதியான பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் சட்ட வைத்திய அதிகாரியை திறந்த மன்றில் சாட்சியமளிக்கச் செய்து அதனை ஒழுங்குபடுத்துவது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்தார்.
றக்பி வீரரின் மரண விசாரணை தொடர்பிலான வழக்கு நேற்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளும் விசாரணைக்கு வந்த போதே நீதிவான் நிஸாந்த பீரிஸ் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் வாகன விபத்தால் ஏற்படவில்லை எனவும் அது ஒரு கொலை என சந்தேகிக்கும் படியாக உள்ளது எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முந்தினம் கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
பற்கள் உடைக்கப் பட்டு, முதுகெலும்பு முறிக்கப்பட்டு, குதி கால் பகுதியில் உள்ள எலும்பும் உடைக்கப்பட்டு, கூரிய ஆயுதத்தால் கழுத்தில் குத்தியும், தட்டையான ஆயுதம் ஒன்றினால் தாக்கியதாலும் றக்பி வீரரின் மரணம் நிக்ழ்ந்திருக்கலாம் எனவும் அதற்கான தழும்புகள் மற்றும் அடையாளங்கள் அவரது சடலத்தில் இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்ப்பித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன் தினம் அறிவித்தனர்.
தாஜுடீன் மரணம் தொடர்பில் மரண விசாரணை நடத்திய முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரகோன் இடைக்கால அறிக்கை ஒன்றை மாத்திரமே சமர்பித்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனவே பூரண மரண விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்பிக்கப்பட வேண்டும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கேட்டுக் கொண்டனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ், இறுதியான முழுமையான மரண விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆனந்த சமரகோனுக்கு தெரிவித்தார்.
மேலும் தாஜூடீன் மரணம் தொடர்பில் மரண விசாரணை நடத்திய நான்கு சட்ட வைத்திய அதிகாரிகளையும் நீதிமன்றில் அழைத்து சாட்சி பெற வேண்டும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதனையும் அன்றைய தினம் மன்றுக்கு தெரியப்படுத்தும் படி நீதிவான் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்தார்.
இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.