த. தே. கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.க.விடம் பணம் பெறவில்லை மறுக்கிறார் மாவை! மைத்திரி, ரணில் ஆகியோரை சந்திக்க திட்டம்!
வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நிலங்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் ...


தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழ் மக்களுடைய காணிகள் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்படும் என நம்பியிருந்தோம். ஆனால் வலி, வடக்கில் 563 ஏக்கர் நிலம் மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று வளலாய் பகுதியில் 400 ஏக்கர் நிலம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் சம்பூர் பகுதியில் 876 ஏக்கர் நிலம் விடுக்கப்படும் என ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் விடுத்த போதும் மீள்குடியேறிய மக்களை பொலிஸார் துரத்தியடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதேபோன்று சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள், கடந்த 20, 22 வருடங்களாக விசாரணைகள் எவையுமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் இவர்களுடைய விடுதலை தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
மேலும் வட, கிழக்கில் பல இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புக்கள் இல்லாத நிலையில் தொடர்ச்சியாக தங்கள் வேலைவாய்ப்புக்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் பல அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் இருக்கின்றது.
எனவே இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடைபெறும்போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்க அனுமதி பெறுமாறு நாங்கள் இன்றைய தினம் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தெரியப்படுத்தவுள்ளோம்.
மேலும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெற்கில் பணம் பெற்றதாக சில உண்மைக்கு மாறான மோசமான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இது பல விமர்சனங்களை எங்கள் மீது சுமத்தியிருக்கின்றது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக உன்மை நிலையை தெளிவுபடுத்துமாறு நாங்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கின்றோம்.
அதன் பதில் கிடைத்தவுடன் அதன் உண்மை தன்மை தொடர்பாக ஒரு செய்தியாளர் சந்திப்பினை நடத்தி தெரியப்படுத்தவுள்ளோம் என்றார்.