முஹம்மது என்ற திரைப்படத்துக்கு முஸ்லிங்கள் எதிர்ப்பு!
இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்): 3 கோடி டாலர் செலவில் ஈரானிய இயக்குனர் தயாரிக்கும் படத்துக்கு சன்னி பிரிவினர் எதிர்ப்பு இஸ்லாம் மார்க்கத்...


இஸ்லாம் மார்க்கத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) வாழ்க்கையின் முக்கிய தருணங்களை மையமாக வைத்து ஈரானைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான மஸ்ஜித் மஸ்ஜிதி என்பவர் இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்) (முகமது: அல்லாஹ்வின்) என்ற திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகின்றார்.
நபியின் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், நபித்துவம் பெற்ற பின்னர் அவரது இறைத்தொண்டு என 3 பாகங்களாக இந்தப் படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரான் சினிமா வரலாற்றிலேயே சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், இதில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய சில காட்சிகள் முஸ்லிம்களின் குறிப்பாக, சன்னி பிரிவினரின் எதிர்ப்பை இப்போதே சம்பாதித்துள்ளது.
இறைவனின் திருத்தூதரை எந்த ரூபத்திலும் காட்சிப்படுத்தப்படுவதை இவர்கள் விரும்புவதில்லை. இப்படத்தில் முஹம்மது நபி (ஸல்) யின் முதுகுப்புறம் தோன்றுவதுபோல் வரும் காட்சியை கடுமையாக ஆட்சேபித்து வருகின்றனர். உலகெங்கும் வாழும் சன்னி முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்படும் எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகமும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் அவரது முகம் தோன்றுவது போன்ற காட்சிகள் இடம்பெறவே கூடாது. மொத்தமாக, இந்தப் படத்தை ஈரான் அரசு தடை செய்ய வேண்டும் என அல்-அஸார் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இந்த கண்டனங்களை எல்லாம் பொருட்படுத்தாத படத்தின்
தயாரிப்பாளரும், இயக்குனருமான மஸ்ஜித் மஸ்ஜிதி, 'தாங்கள் கூற விரும்பும் செய்திகளை பலர் சினிமாக்கள் மற்றும் புகைப்படங்களின் மூலமாக பதிவு செய்துவரும் காலத்தில் நமது நபியை நாம் எப்படி அறிமுகப்படுத்துவதாம் ..?' என்று இவர் சீறிப் பாய்கிறார். உணர்வுகளை மையமாக வைத்து பல வெற்றிப்படங்களை தயாரித்து இயக்கியுள்ள இவர் பல சர்வதேச விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.