ஹஜ் கோட்டா பகிர்வை நடைமுறைப்படுத்த அனுமதி
ஹஜ் கோட்டா பகிர்வுக்கு எதிராக மூன்று ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர்களால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிம...

ஹஜ் கோட்டா பகிர்வுக்கு எதிராக மூன்று ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர்களால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைமீறல் வழக்கில் உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பினை வழங்கியது.
ஹஜ் முகவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை எனத் தெரிவித்த உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் பகிரப்பட்டுள்ள கோட்டாவுக்கான அனுமதியை வழங்கினார்.
இதனடிப்படையில் ஏற்கனவே பகிரப்பட்ட முகவர்களின் கோட்டா விபரப்பட்டியல் நேற்றே உடனடியாக சவுதி ஹஜ் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஹஜ் கோட்டா உயர் நீதிமன்ற ஹஜ் வழிகாட்டல்களின்படி பகிரப்படவில்லையெனவும் இது தமது அடிப்படை உரிமைமீறல் எனவும் காரா, சப்ரா, ட்ரான்ஸ் வர்ல்ட் ஆகிய மூன்று முகவர் நிலையங்களின் உரிமையாளர்கள் இவ்வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர்.
முதலாம் முறையாக கோட்டா ஹஜ் முகவர்களுக்கிடையில் பகிரப்பட்டபோது உயர் நீதிமன்ற ஹஜ் வழிகாட்டல்களை மீறி கோட்டா பகிரப்பட்டுள்ளதாகவும் அதனைத் தடைசெய்து மீள பகிர உத்தரவிடும்படியும் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஹஜ் குழு ஹஜ் வழிகாட்டல்களின்படி நேர்முகப்பரீட்சையை நடத்தி கோட்டாவை மீள பகிர ஏற்பாடு செய்வதாக உயர் நீதிமன்றில் மனுவொன்றினை சமர்ப்பித்தது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஹஜ் குழு இரண்டாம் முறையாக நேர்முகப்பரீட்சை நடத்தி கோட்டாவை மீளப் பகிர்ந்தது. அந்தப்பகிர்வும் தமது அடிப்படை உரிகைளை மீறி பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மூன்று முகவர் நிலைய உரிமையாளர்கள் மனுவொன்றினை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர். இம்மனுவினை விசாரித்த நீதிமன்றம் நேற்று குறிப்பிட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளது.
வாதிகளான மூன்று ஹஜ் முகவர்கள் சார்பில் சட்டத்தரணி மனோகர டி சில்வாவும், முஸ்லிம் சமய மற்றும் தபால் அமைச்சின் சார்பில் சட்டத்தரணி ஞான ராஜும் ஆஜராகியிருந்தனர்.