முழு சமூகத்தையும் முத்திரை குத்த முடியாது : பௌசி
இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்டார் என்பதற்காக முழு முஸ்லிம் சமுதா...


இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்டார் என்பதற்காக முழு முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிட முடியாது. முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுடையவர்கள்.
நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் என தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விளக்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் தலைவருமான ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்டமை இஸ்லாத்துக்கும், இல்லாமிய சட்டங்களுக்கும் விரோதமான செயலாகும். இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டு வான் தாக்குதலில் பலியான இலங்கை முஸ்லிம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் “விடிவெள்ளி”க்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எந்தவொரு முஸ்லிமும் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதும், நாட்டின் இறையான்மைக்கும் மாறாக நடந்து கொள்வதும் இஸ்லாத்துக்கு விரோதமான செயலாகும்.
இதனை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் ஏற்பட்ட தொடர்புகளின் பின்னணி, அதற்கான காரணம், வெளிநாட்டுத் தொடர்புகள் பற்றி விசாரணைகள் நடாத்தி உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தாம் பூரண ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன்.
முஸ்லிம்களின் இவ்வாறான தொடர்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அமைப்புகளுக்கு சாதகமாக அவர்களது பிரசாரங்களுக்கு உதவியாக அமைந்துவிடும். எனவே முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் சமுதாய நலனைப்பேண வேண்டும் என்றார்.