கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ரவூப் ஹக்கீம் நடவடிக்கை
கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாற்று வழிகளை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உரிய கவனம் செலுத்துமாறு தமது அமைச்சின் உயரதி...

கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாற்று வழிகளை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உரிய கவனம் செலுத்துமாறு தமது அமைச்சின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கண்டி நகரை ஊடறுத்துச் செல்லும் மகாவலி கங்கையின் இயற்கை எழிலை ரசிப்பதற்கு தடையாக இருக்கும் புதர்கள் மண்டியதான அதன் பின்புறத் தோற்றத்தை சீர்படுத்தி அமைப்பதன் ஊடாக உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை பெரிதும் கவரக்கூடியதாக இருக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பத்தரமுல்ல, ‘செத்சிறிபாயவில்’ அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் நடைபெற்ற உயரதிகாரிகளுடனான முக்கிய கலந்துரையாடலொன்றின் போதே அமைச்சர் ஹக்கீம் இவற்றைக் கூறினார்.
கண்டி நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக நாள்தோறும் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்துவதற்குரிய வழிவகைகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளிடம் வலியுறுத்திய அமைச்சர் ஹக்கீம், மகாவலி கங்கையை அண்டியதாக கண்ணொருவைலிருந்து, குஹாகொட ஊடாக கட்டுகஸ்தோட்டை நோக்கிச் செல்லும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அமைக்கப்பட்ட பாதையோடு கட்டுகஸ்தோட்டையிலிருந்து மடவளையூடாக திகனை செல்லும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ்வரும் பாதையையும் தொடர்புபடுத்துவதன் மூலம் போக்குவரத்தை இலகுவாக்குவதற்கும், வாகன நெரிசலைத் தவிர்ப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவது மிகவும் பயனளிக்குமென்று கூறினார்.
அத்துடன். உத்தேசக் கண்டி அதிவேக நெடுஞ்சாலையை கலகெதர வெளிச்செல்லும் இடத்திலிருந்து முன்னோக்கிக் கொண்டு சென்று வேறு பாதைகளோடு தொடர்புபடுத்தி கண்டிப் பகுதி போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்கான தீர்வொன்றைக் காண்பது பற்றியும் கூறப்பட்டது.
கண்டி நகரை அழகுபடுத்துவதற்கான ஆலோசனைகளை ஏற்கனவே அண்மையில் கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற நகர அபிவிருத்தியோடு தொடர்புடைய நிறுவனங்களுடனான கருத்தரங்கின் போது தாம் வழங்கியிருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், பழைமை வாய்ந்த பாரம்பரிய கண்டி தபால் நிலையத்தை புனரமைப்பதோடு, போகம்பரை சிறைச்சாலை வளவு உட்பட நகரின் ஏனைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் மறுசீரமைப்பதனூடாக மரபுரிமை நகர என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கண்டியின் எழிலுக்கு மேலும் மேருகூட்டலாம் என்றார்.
இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் பீ.சுரேஸ், உபாய நகர அபிவிருத்தி செயல்திட்டப் பணிப்பாளர் அனுர தசநாயக்க உட்பட நகர அபிவிருத்திகார சபை, காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், கொழும்பு மாநகர சபை, சிவில் பாதுகாப்புப் படையணி, சுற்றடால் பொலீஸ் உயரதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர்.