நேற்று சுபநேரத்தில் வேட்புமனுவில் கையெழுத்திட்டாராம் மகிந்த? பசில் தகவல்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் ஜனாத...


நேற்று சுபநேரத்தில் வேட்புமனுவில் மகிந்த ராஜபக்ச கையெழுத்திட்டதாக, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்திற்கு வேட்புமனுவில் கையெழுத்திடவே நேற்று மகிந்த விஜயம் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும், அதற்கு மறுப்புத் தெரிவித்து, இன்றே கையெழுத்திடவுள்ளதாக சிங்கள ஊடகமொன்றிற்கு மகிந்த குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் இன்றே அதிகாரபூர்வமாக வேட்புமனுக்களில் கையெழுத்திடவுள்ளனர்.
நேற்றைய தினமே வேட்புமனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை ஆரம்பிக்கவிருந்த போதிலும், வேட்பாளர் பட்டியல் இறுதிப்படுத்தப்படுவதில் ஏற்பட்ட இழுபறியால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்றும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக நிலவிய இழுபறி நிலையால், மகிந்த ராஜபக்ச தரப்பின் செய்தியாளர் மாநாடுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.
இன்று நாரஹேன்பிட்டிய அபேராம விகாரையில் நடக்கவுள்ள செய்தியாளர் சந்திப்பில், மகிந்த அணியின் முக்கிய தலைவர்களான தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலை குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.