அற்பசொற்ப சலுகைகளுக்காக தமிழர்களின் வாக்குகளை சூறையாட முயற்சி: பொன்.செல்வராசா காட்டம்
தமது சுயநலனுக்காகவும், அற்பசொற்ப சலுகைகளுக்காகவும் தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாட முனைவோர் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும...

http://kandyskynews.blogspot.com/2015/07/see-more-at-httptamilseithynet54841stha.html

தமது சுயநலனுக்காகவும், அற்பசொற்ப சலுகைகளுக்காகவும் தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாட முனைவோர் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிலைமைகள் தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழ் மக்களின் நன்மை தீமைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து கரிசனையுடனேயே செயற்பட்டு வருகின்றது.நாங்கள் என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தூரநின்று பார்வையாளராக செயற்பட்டது கிடையாது.
என்றும் அவர்களுக்காகவே எமது காலத்தினை அர்ப்பணித்து வருகின்றோம். கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழும் பிரதேசமாகும்.இங்கு எமது அரசியல் ரீதியான இருப்பினை தக்கவைப்பதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும்.
எதிர்காலத்தில் தூர நோக்குடனான அரசியல் முன்னெடுப்புகளை நாங்கள் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.எமது மக்களின் உரிமைகளுடன் இணைந்த அபிவிருத்தியையும் கொண்ட அரசியல் பயணத்தினை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
இன்று கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பல்வேறு வழிகளில் பலர் தேர்தலுக்காக இங்கு வருகை தருகின்றனர். உண்மையான மக்களின் மீது பற்றுக்கொண்டவர்களை நாங்கள் வரவேற்கின்றோம்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சூறையாட வருகைதருவோர் தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் இங்கு தமிழ் மக்களுக்கு பலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகின்றது.
தமிழ் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முகம்கொடுத்து அவற்றுக்கு எதிராக போராடும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தினை அதிகரிப்பதன் மூலமே நாங்கள் பேரம்பேசும் சக்தியாக உருவாகமுடியும்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெறுவதன் மூலம் எதிர்வரும் காலத்தில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் பேரம்பேசும் சக்தியாக மாற்றமடையும். அதன்மூலம் எமக்கு தேவையான பல விடயங்களைப் பெறக்கூடிய நிலையேற்படும்.
கடந்த 65வருடகால போராட்டத்தில் பல இழப்புகளை எதிர்கொண்ட சமூகமாக இருக்கும் நாங்கள் பேரம்பேசும் சக்தியாக மாற்றம் பெறவேண்டிய மிகவும் அவசியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். இந்த தேர்தலை வெளிநாட்டு சக்திகள் இன்று உன்னிப்பாக அவதானித்துவருகின்றன.
எமது சமூகம் தொடர்பில் சர்வதேச சமூகம் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கும் காலம் நெருங்கிவருகின்ற காரணத்தினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியே அந்த நிலைமையை ஏற்படுத்தும் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்று வடக்கு கிழக்கில் பல கட்சிகள்,சுயேட்சைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை சூறையாட களமிறங்கியுள்ளதாக அறியவருகின்றது.இந்த நிலைமையினை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள் என நம்புகின்றோம் என்றார்.