“ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் இஸ்ரேல் தேசத்துக்கே அச்சுறுத்தல்” | இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு
ஈரானின் அணு ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச ஒப்பந்தமானது, இஸ்ரேல் தேசத்துக்கே அச்சுறுத்தலாகும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கருத்து ...


ஈரானின் அணு ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச ஒப்பந்தமானது, இஸ்ரேல் தேசத்துக்கே அச்சுறுத்தலாகும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கருத்து தெரிவித்தார்.
வல்லரசு நாடுகள், ஈரானுடன் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கடும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு அந்த நாடு அணு ஆராய்ச்சி மேற்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.
இதற்கான இறுதி ஒப்பந்தம் கடந்த வாரம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஈரான் அணு ஆராய்ச்சி ஒப்பந்தமானது, இஸ்ரேல் தேசத்துக்கே அச்சுறுத்தல் தருவதாக அமையும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்கு பதிலாக, அந்த ஒப்பந்தமானது அணு ஆயுதம் தயாரிக்க உதவும் விதமாக அமையப் போகிறது. அணு ஆயுதப் போட்டி அதிகரிப்பதுடன், கொடூரமான போர் வெடிக்கும் ஆபத்தும் உள்ளது என்று நெதன்யாஹு கூறினார்.
அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஈரானின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை எனவும், ஹிஸ்புல்லா, பாலஸ்தீன தீவிரவாதக் குழுக்களுக்கு ஈரானின் ஆதரவு தொடரும் எனவும் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி சனிக்கிழமை கருத்து தெரிவித்ததற்கும் நெதன்யாஹு கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஈரான் மீது தாக்குதல் தொடுப்பதற்கு 40 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக, கடந்த வாரம் இஸ்ரேலில் வெளியான ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.