வேட்புமனுத் தாக்கலின் பின்னர் பேரணிகளை நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பேரணிகளை நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்...


பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பேரணிகளை நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த பேரணிகளை நடத்தியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தல் நிறைவு பெற்று ஒருவாரம் கடக்கும் வரை அரசியல் பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக நல மற்றும் மத ஊர்வலங்களை மாத்திரமே இந்தக் காலப் பகுதியில் நடத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் நேற்று (13) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மத்திய , வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் வாகனப் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய இந்த பேரணிகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மாஅதிபர் குறித்த மூன்று மாகாணங்களுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களுக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.
வழக்குத் தாக்கல் செய்வதற்காக குறித்த விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை சட்டமாஅதிபரிடம் கையளிக்கப்படவுள்ளன.