ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. ஆரம்ப தின நிகழ்வில் உரை நிகழ்த்தவுள்ள மனித உரிமைக...
- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.
ஆரம்ப தின நிகழ்வில் உரை நிகழ்த்தவுள்ள மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல்- ஹுசைன் சிறிலங்கா விவகாரம் பற்றியும் சுருக்கமாக குறிப்பிடவுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதன்போது சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வர டாந்த அறிக்கையும் மார்ச் முதல் வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் பற்றியும், நாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.
மேற்படி வருடாந்த அறிக்கையில் சிறிலங்காவின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பிலும் பதிவுகள் இடம்பெற்றிருக்கக்கூடும்.
குறிப்பாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் புதிய அரசு கொண்டுவரவுள்ள சட்டத்திருத்தங்களுக்கு வரவேற்பு தெரிவிக்கப்படவுள்ளது.
நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் பின்னர் நீக்கப்பட்டள்ளது. சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குறித்த அறிக்கை ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தொடரில் சிறிலங்காவின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்க, பிரித்தானியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் கருத்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.