வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை படுகொலை செய்திருந்தால் ராஜபக்சவினரை காப்பாற்ற முடியாது! ராஜித
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அத்துடன் ராஜபக்சமார்களை எங்கும் சிக்கவைக்கமாட்டோம். ஆனால் வெள்ளைக...


போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அத்துடன் ராஜபக்சமார்களை எங்கும் சிக்கவைக்கமாட்டோம். ஆனால் வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்களை படுகொலை செய்திருந்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
ஐக்கிய நாடுகளின் அறிக்கை வந்துள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அந்த அறிக்கை வரும் என்று எதிர்பார்க்கின்றோம்.
அந்த அறிக்கை வந்ததும் நாம் சர்வதேச தரத்துக்கு உட்பட்டு உள்ளக விசாரணையை ஆரம்பிப்போம். ஆனால் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட எந்தவொரு ராஜபக்சவையும் சர்வதேசத்திடம் ஒப்படைக்கமாட்டோம்.
சர்வதேச தரத்துடன் உள்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைய உள்ளக விசாரணைகளை முன்னெடுப்போம். அதனைத்தான் ஐக்கிய நாடுகள் சபையும் எதிர்பார்க்கின்றது. எக்காரணம் கொண்டும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கோ வெளிநாடுகளின் தலையீடுகளுக்கோ ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
ஆனால் வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்களை படுகொலை செய்திருந்தாலோ அல்லது பணத்துக்கு கொலை செய்திருந்தாலோ அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உள்ளக விசாரணையை நடத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
மேலும் மஹிந்த ராஜபக்சதான் இந்த விடயத்தை சர்வதேசமயமாக்கினார். அவர்தான் தருஷ்மன் குழுவுக்கு இணங்கினார். அதனை விடுத்து உள்ளக விசாரணையை நடத்தியிருந்தால் எந்த சிக்கலும் வந்திருக்காது.
எனவே மஹிந்தவே பிரச்சினைகளை குழப்பியுள்ளார். அவர்தான் சர்வதேச குழுவை இங்கு வரவழைத்தார்.
ஆனால் எமது அரசாங்கம் திட்டமிட்டு அனைத்தையும் செய்து வருகின்றது. அந்தவகையில் ஆகஸ்ட் மாதம் அறிக்கை வந்ததும் செப்டெம்பர் மாதமளவில் விசாரணையை ஆரம்பிப்போம். அவை சர்வதேச தரத்தில் அமையும்.
அப்படியானால் யாராவது போர்க் குற்றங்கள் செய்திருந்தால் தண்டிக்கமாட்டீர்களா? என்ற வினாவுக்கு உள்ளக விசாரணை நடத்தி அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம் என பதிலளித்தார் அமைச்சரவைப் பேச்சாளர்.