ISS இற்கு செல்லவிருந்த நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்துச் சிதறியது!
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கெனவரல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பூமியைச் சுற்றி வரும் ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வ...

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கெனவரல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பூமியைச் சுற்றி வரும் ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செலுத்தப் பட்ட ஆளில்லா Space X Falcon 9 என்ற ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு 3 நிமிடங்களுக்குள் விண்ணில் வெடித்துச் சிதறியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்குள் ISS இற்குத் தேவையான பொருட்களைக் காவிச் சென்ற போது விபத்தில் சிக்கிய 3 ஆவது கார்கோ ராக்கெட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.
ISS இற்கு மிக அவசியமான சுமார் 1800 Kg எடையுடைய பொருட்களையும் கருவிகளையும் காவிச் சென்ற போது விபத்தில் சிக்கிய இந்த ஸ்பேஸ் X ராக்கெட்டு ISS இற்கு செலுத்தப் பட்ட முதலாவது தனியார் நிறுவன ராக்கெட்டு ஆகும். மேலும் இந்த விபத்தால் நாசாவுக்குப் பல கோடி டாலர்கள் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. மேலும் குறித்த ராக்கெட் விண்ணுக்குச் செலுத்தப் பட்ட பின்னர் அதன் மேல் மட்ட திரவ ஆக்ஸிஜன் டேங்கில் ஏற்பட்ட அளவுக்கு மீறிய அழுத்தமே குறித்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஸ்பேஸ் X ஸ்தாபகர் எலொன் முஸ்க் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் நாசாவோ இந்தத் திடீர் விபத்துக்கு என்ன காரணம் என இன்னமும் கண்டறியப் படவில்லை என்றே அறிவித்துள்ளது. தற்போது ISS இல் கடந்த ஒரு வருடமாகத் தங்கி ஆய்வு நடத்தி வரும் ஒரேயொரு விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி என்ற அமெரிக்கருக்கும் வருங்காலத்தில் ISS இற்கு வரவுள்ள வீரர்களுக்குமென சுமார் 4000 பவுண்டு எடையுடைய பதப் படுத்தப் பட்ட உணவையும் பல முக்கிய உபகரணங்களையும் விபத்தில் சிக்கிய ஸ்பேஸ் X இன் Falcon 9 ராக்கெட்டு காவிச் சென்றிருந்ததாகவும் கூறப்படுகின்றது.