நிதி நிர்வாகம் சிதையாமல் தடுப்பதற்காக வங்கிகளைத் தற்காலிகமாக மூடியது கிறீஸ்!
சமீப காலமாக வெளிநாட்டுக் கடன் பிரச்சினைகள் காரணமாக கிறீஸ் இன் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்றிருந்ததுடன் நிதிப் பிரச்சினையால் அது சிக்கித்...

சமீப காலமாக வெளிநாட்டுக் கடன் பிரச்சினைகள் காரணமாக கிறீஸ் இன் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்றிருந்ததுடன் நிதிப் பிரச்சினையால் அது சிக்கித் தவித்து வந்தது.
இந்நிலையில் தமது நாட்டின் நிதி நிர்வாகம் முழுமையாக செயலிழந்து மக்கள் மத்தியில் பீதி ஏற்படாது தடுப்பதற்காக திங்கட்கிழமை தனது நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளையும் கிறீஸ் அதிரடியாக மூடியுள்ளது.
இதன் காரணமாக இன்று கிறீஸின் வங்கிகளிலுள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பொது மக்கள் பணம் பெறுவதற்கு ஓர் எல்லை விதிக்கப் பட்டதால் அவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானதுடன் சர்வதேச சந்தைகளில் கீறிஸின் பங்குகளும் நிறுத்தப் பட்டுள்ளன. ஐரோப்பிய வலையமைப்பில் (Eurozone) இருந்தும் யூரோ நாணயத்தில் இருந்தும் கிறீஸ் வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் கிறீஸின் இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்து அறிவித்திருந்தது. இதையடுத்து வரலாற்றிலேயே மிக மோசமான கணங்களை யூரோ நாணயம் எட்டியுள்ளதுடன் இதனால் ஐரோப்பியத் தலைவர்களும் அதிர்சியடைந்துள்ளனர்.
மேலும் ஜேர்மனி சேன்சலர் ஏஞ்சலா மேர்கெலை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா இவ்விவகாரம் தொடர்பில் உரையாடினார். மேலும் இவ்விரு முக்கிய தலைவர்களுமே கிறீஸ் பிரச்சினையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கிறீஸ் கடன் பிரச்சினை தொடர்பில் ஐரோப்பாவும், சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்திய தீர்வை கிறீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் ட்ஸிப்ராஸ் கடுமையாக சாடியிருந்ததுடன் இந்த மும்மொழிவை ஜூலை 5 ஆம் திகதி பொது மக்கள் மீது வாக்கெடுப்புக்கு விடவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையை அடுத்து அனைத்து ஐரோப்பிய அதிகாரிகளும் கிறீஸ் இற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வதற்கான முயற்சிகள் குறித்துத் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
மறுபுறம் ஐரோப்பிய மத்திய வங்கி கிறீஸ் வங்கிகளுக்கு எந்தவொரு புதிய அவசர உதவியும் அளிக்கப் படாது எனவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் கிறீஸ் வங்கிகள் அனைத்தும் ஜூலை 6 ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என்றும் வங்கிகளில் ஏடிஎம் மூலம் தினமும் எடுக்கக் கூடிய அதிகபட்சப் பணம் வெறும் 60 யூரோக்களாகவே இருக்க முடியும் என்றும் இக்காலப் பகுதியில் கிறீஸ் பங்குப் பரிமாற்றமும் நிறுத்தப் பட்டிருக்கும் எனவும் கிறீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
IMF இற்கு கிறீஸ் தனது கடனைத் திருப்பித் தருவதற்கான கால எல்லை செவ்வாய்க் கிழமையுடன் முடிவடைகின்ற போதும் அதற்குள் இதனை சாத்தியமாக்க கிறீஸால் முடியாது போகும் என்றே ஊகிக்கப் படுகின்றது. இந்நிலையில் கிறீஸின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அதன் பொருளாதாரத்தையும் குடி மக்களையும் மிகவும் பாதித்து சுற்றுலாப் பயணிகளது வருகையையும் கடும் வீழ்ச்சியடையச் செய்யும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. அனைத்து விதமாகவும் கிறீஸின் கடன் தொகையானது இதுவரை 323 பில்லியன் யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.