கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பொத்துவில், கட்டுகஸ்தோட்ட...


கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பொத்துவில், கட்டுகஸ்தோட்டை, களுவாஞ்சிக்குடி, கம்பஹா, புலஸ்திபுர, பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
பொத்துவில் அக்கரைப்பற்று வீதியின் செம்மணிக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.
அக்கரைப்பற்றுக்கு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்காட்டுப்பாட்டை இழந்து வீதியோரமுள்ள கல்லில் மோதி ஓடைக்குள் வீழ்ந்துள்ளது.
விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை பகுதியில் வேன் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தொண்டர் ஆசிரியைகள் சிலரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றே வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த மரத்தில் மோதியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
புலஸ்திபுர பகுதியில் வேன் ஒன்று மோதியதில் வீதியை கடக்க முயன்ற ஆறு வயது சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 21 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.