ஜோனுக்கு எதிராக இன்று வாக்கெடுப்பும்:நிறைவேறினால் பதவியிழப்பார்
பொது மக்கள் பாதுகாப்பு அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக இன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கை...


எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 114 உறுப்பினர்கள் இணைந்தே மேற்படி பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 7ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நயாகம் தம்மிக்க தசநாயக்கவிடம் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டிருந்தது.
வத்தளைப் பிரதேச சபையின் தவிசாளர் தாக்குதலுக்கு உள்ளானமை, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சுதந்திரக் கட்சியினர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமை ஆகியவற்றை சுட்டிக்காட்டியே 114 உறுப்பினர்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க மீது நம்பிக்கை இழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவரால் அமைச்சுப்பதவியை தொடர முடியாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேரணை தொடர்பான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது விவாத்தின் இறுதியில் அதனை நிறைவேற்றும் பொருட்டு வாக்கெடுப்பு கோரப்படும் பட்சத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படும் பிரேரணைக்கு ஆதரவாக மேலதிக வாக்குகள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும்.
பிரேரணை அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க தனது அமைச்சுப்பதவிகளை இழந்தவராக இருப்பார் அத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறும் பட்சத்தில் அது அவரது பாராளுமன்ற உறுப்பினர் பிரவிக்கு எந்தப்பாதிப்புக்களையும் ஏற்படுத்தமாட்டாது.
இன்று இடம் பெறவிருக்கின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த சகல உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறும்பட்சத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.