பதவியில் இருக்கும்போதே பதவியை இழந்த ஒரு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே :பொன்.செல்வராசா
எமது நாட்டில் பதவியில் இருக்கும் போதே பதவி இழந்த ஒரு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே. இன்னும் இரு ஆண்டுகள் பதவிக் காலம் இருக்கையில் ஆயுள் ...


எமது நாட்டில் பதவியில் இருக்கும் போதே பதவி இழந்த ஒரு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே. இன்னும் இரு ஆண்டுகள் பதவிக் காலம் இருக்கையில் ஆயுள் பூராகவும் தானே ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற பேராசையுடன் களம் இறங் கிய மஹிந்த ராஜபக் ஷ, கையில் இருந்த பதவியையும் கைநழுவ விட்ட பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளார். இந்த மனநிலையை அவருக்கு கடவுள்தான் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் இன்னும் இரண்டு வருடங்கள் இந்த கொடுங்கோல் ஆட்சி நீடித்திருந்தால் மக்கள் தாங்க மாட்டார்கள் என்று கடவுளே தீர்மானித்துத்தான் இத்தகைய ஒரு மனமாற்றத்தை பேராசையை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
குறுமண்வெளி சக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் 26 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வாக்காளர்களும் கட்சி பேதங்களுக்கப்பால் நாடு தழுவிய ரீதியில் சிங்கள, தமிழ், முஸ்லிம். மலையக மக்கள் இம்முறை ஒன்றிணைந்து ஏகாதிபத்திய மற்றும் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து வாக்குப்போர் நடத்தி தங்கள் வல்லமையை நிரூபித்துள்ளனர். இதை உண்மை யிலேயே கடவுளும் மக்களும் இணைந்து எடுத்த தர்மத்தை நிலைபெறச் செய்வதற்கான தீர்மானமாகவே நாம் கருத வேண்டும்.
இல்லாவிட்டால் இத்தகையதொரு அமைதி வாக்குப் புரட்சி ஏற்பட்டிருக்க முடியாது. கடைசி நேரம் வரை தனது வழக்கமான பாணியில் பதவியை தக்கவைக்க எடுத்த பிரயத்தனங்கள் அனைத்தும் பிசுபிசுத்துப் போன நிலையில் வெளிநாட்டு அரசுகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலே அவர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார். வெளியேறும் போது மக்கள் தீர்ப்பிற்கு தலை வணங்கி புதிய ஜனாதிபதிக்கு வழி விட்டுச் செல்வதாக கூறினார். ஆனால் பதவி விலகிய பின்னரும் அவரிடமிருந்து இனத்துவேஷம் அற்றுப் போகவில்லை என்பதை அவர் தனது இல்லத்தில் தனது கிராம மக்களுக்கு ஆற்றிய உரை மூலம் வெளிப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்களே தனது தோல்விக்கு காரணம் என்று அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். இக் கருத்தானது இனத்துவேஷத்தை தூண்டி நாட்டில் மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே கூறப்பட்டிருக்க வேண்டும். எனினும் சிங்கள மக்கள் பக்குவமான நிலையில் உணர்ச்சிவசப்படாமல் அமைதி காத்திருக்கின்றார்கள். அத்துடன் புதிய அரசின் சட்ட திட்டங்களைப் பேணும் நடவடிக்கையால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.
இதிலும் அவர் தோல்வியையே கண்டுள்ளார். தேர்தலின் பின்னர் அவர் தொடர்ந்து தோல்விகளைத் தழுவிய வண்ணம் உள்ளனர்.
அவர் எதிர்பார்த்த கட்சித் தலைவர் பதவியும் கைவிட்டுப் போயுள்ளது. அதற்கு அவர் கட்சி இரண்டாக உடைவதைத் தவிர்ப்பதற்காகவே பதவியை விட்டுக் கொடுத்ததாக கூறியுள்ளார். எத்தனையோ கட்சிகளை கூறு, கூறாக உடைத்து தனது பதவியை தக்க வைத்துக் கொண்டவருக்கு இப்போதுதான் ஞானம் பிறந்திருக்கின்றது. தனது கட்சிக்கு வரும்போதுதான் அதன் தாக்கம் அவருக்குப் புரிந்திருக்கின்றது.
யுத்த வெற்றியின் போது கைப்பற்றிய தளபாடங்களையும் கருவிகளையும். போராளிகளின் வதிவிடங்களையும் பார்ப்பதற்கு சிங்கள மக்களுக்கு இலவச போக்குவரத்து மற்றும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அளவிலா ஆனந்தம் கொண்டவர். ஆனால் இன்று அவர் வாழ்ந்த ஆடம்பர அலரி மாளிகை மக்களின் ஆசியாவின் அதிசயமிக்க காட்சி கூடமாக மாறியிருக்கின்றது. இதுதான் கால மாற்றம். இது இனவாத அரசியலவாதிகளுக்குச் சிறந்த பாடமாக அமைய வேண்டும்.
எனவே இனியும் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்பதை எமது மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இன்றைய அரசின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமைந்திருக்கின்றது. எமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படுகின்றது. செயல் வடி வம் பெற்றுக் கொண்டிருக்கின்து. நாட் டிற்கான நல்லதொரு தலைவரைப் பெற் றிருக்கின்றோம். அதனால் நாட்டில் பூரண அமைதி நிலவுகின்றது. எமது அபிலா ஷைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிகின்றது.