கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுகுவோம்: ஜம்இய்யத்துல் உலமா
நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுக வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அகில ...


நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுக வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாறக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஏதாவது ஒரு நாடு வெற்றி பெறலாம். ஆனால் வெற்றியின் போதும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் நமது நாட்டின் ஐக்கியத்திற்கும் சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சகலரும் நடந்து கொள்ளவேண்டும்.
எமது தாய் நாடான இலங்கையில் முஸ்லிம்களாகிய எமக்கு நீண்ட கால வரலாறு உண்டு. வரலாறு நெடுகிலும் நாட்டுக்காக பல பங்களிப்புகளை செய்து, நாட்டுப் பற்றுடனும், ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும் சகவாழ்வுடனும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். காலாகாலமாக முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையே காணப்பட்டுவரும் ஒற்றுமையையும் சகவாழ்வையும் சீர்குலைக்கும் முயற்சியில் பல தீய சக்திகள் ஈடுபட்டுவரும் இந்நிலையில் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் நாம் மிகுந்த அவதானத்துடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும்.
கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சிலர் விளையாட்டு மைதானத்தில் பிழையாக நடந்து கொண்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சர்வதேச விளையாட்டுகளின் மூலம் நாடுகளுக்கிடையிலான உறவுகள் பலப்படுகின்றன. விளையாட்டுகள் என்பவை ஓய்வு நேரத்தை குதூகலமாகவும் மனதுக்கு இதமாகவும் கழிப்பதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன. மேலும் அவை சிறந்த உடற்பயிற்சியாக அமைகின்றன. இந்த எல்லைகளை தாண்டி பரஸ்பர வெறுப்பையும் இன முறுகல்களையும் தோற்றுவிக்கும் ஊடகங்களாக அவற்றை நாம் மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனமானதல்ல.
மேலும் இவற்றை அடிப்படையாகக் கொண்ட சூதாட்டங்கள் மற்றும் நேரத்தை வீணாகக் கழித்தல் போன்ற ஷரீஅத் தடைசெய்த விடயங்களை ஒவ்வொரு முஸ்லிமும் தவிர்ந்து கொள்ள வேண்டும். இது போன்ற உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது உலமாக்கள் தமது குத்பாப் பிரசங்கங்களையும் உரைகளையும் இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் மஸ்ஜித் நிர்வாகிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது” என்றார்.