கொழும்பு அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனத்தை வழங்குவதென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இத...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனத்தை வழங்குவதென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து கொழும்பு அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மஹிந்தவுக்கு எதிராக புதிய கூட்டணிகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
புதிய அரசியல் கூட்டணியில் மஹிந்தவுக்கு எதிரான பல அரசியல் கட்சிகள் இணையவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கூட்டணி பலவீனமான நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிடலாம்.
மஹிந்தவின் மீள்வருகையை தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து விலகலாம், மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிலிருந்து ஓரு கட்சியாவது விலகலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை ஜனவரி 8 ம் திகதி மௌனப்புரட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ள போதிலும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கியப்பட்ட கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தற்போது மீள்பரிசீலனை செய்து வருகின்றன.
தங்களுடைய முக்கிய அரசியல் எதிரியின் பிரச்சாரத்துடன் தாங்கள் நெருக்கமாக காணப்பட்டால் தங்களது நம்பிக்கை தன்மை பாதிக்கப்படும் என அந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நெருக்கடியான சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவின் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுவது குறித்து சிந்தித்து வருகின்றது. மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டால் நாங்கள் அவரை தோற்கடிப்பதற்காக ஏனைய கட்சிகளுடன் இணைந்து புதிய அரசியற் கூட்டணியை அமைக்க தயார் என சரத்பொன்சேகா கட்சி பேச்சாளர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக சிறிலங்காவில் நல்லாட்சி காணப்பட்டதாக தென்பட்டாலும், மஹிந்தவின் மீள் அரசியல் பிரவேசம் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது.