ராணுவ தளத்திலிருந்து பயங்கர ஆயுதங்களை திருடி சென்ற மர்ம கும்பல்: அதிர்ச்சியில் பிரான்ஸ் அரசு
பிரான்ஸ் நாட்டில் உள்ள ராணுவ கிடங்கில் நுழைந்து நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அந்ந...


தெற்கு பிரான்ஸில் உள்ள Miramas என்ற நகருக்கு அருகே சுமார் 618 ஏக்கர் பரப்பளவில் பிரான்ஸ் நாட்டு ராணுவ தளம் அமைந்துள்ளது.
இந்த தளத்தை சுற்றி இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்படாமல் உள்ளதால் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாகவே இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு நேரத்தில், இரும்பு வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்து 180 டெட்டனேட்டர்கள், 40 கை எறி வெடிகுண்டுகளை திருடி சென்றுள்ளனர்.
ராணுவ தளத்தில் நிகழ்ந்த இந்த திருட்டு சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருட்டு விவகாரம் வெளியே கசிந்துள்ளதால், இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரமாக ரகசியமாக நடைபெற்று வந்த விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு திட்டமிட்ட அமைப்பாக தான் இருக்கும் என அதிகாரிகள் தற்போது முடிவு செய்துள்ளனர்.
ராணுவ தளத்தில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி இருப்பது ராணுவ அமைச்சகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக பதில் அளித்துள்ள ராணுவ அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள ராணுவ தளங்களில் உள்ள ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.