லாஇலாஹ இல்லல்லாஹு ஸ்டிக்கர்: முச்சக்கர வண்டி உரிமையாளரை தூஷித்த பொலிஸ்
“லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற அரபு வசனங்களுடன் கூடிய ஸ்டிக்கர் ஒன்றினை முச்சக்கர வண்டியில் ஒட்டியிருந்த மு...


“லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற அரபு வசனங்களுடன் கூடிய ஸ்டிக்கர் ஒன்றினை முச்சக்கர வண்டியில் ஒட்டியிருந்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தூஷண வார்த்தைகளால் ஏசி ஸ்டிக்கரை கழற்றி எறியச் சொன்ன சம்பவமொன்று மாத்தளை நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பகல் வேளை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மாத்தளை பொலிஸில் முச்சக்கரவண்டி சாரதி முறைப்பாடொன்றினைச் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணையை கண்டி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பி.எம்.எம்.ஜி.பி.பெரமுன நேற்று முன்தினம் பிற்பகல் மேற்கொண்டார்.
இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது மாத்தளை கோட்டகொடையைச் சேர்ந்த நௌசாட் என்பவர் தனது 4 பிள்ளைகளுடன் பெருநாள் உடை வாங்குவதற்காக மாத்தளை நகருக்கு முச்சக்கர வண்டியில் வந்துள்ளார். முச்சக்கர வண்டியின் பின்னால் குறிப்பிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்ணுற்ற பொலிஸ் உத்தியோகத்தர் முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார்.
வண்டிக்குள் மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் இருந்துள்ளனர். ஒரு பெண்பிள்ளை இளம் வயது பிள்ளையாகும்.
முச்சக்கர வண்டியை நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் அரபு வசனங்களுக்கு விளக்கம் கோரியதுடன் சாரதியை அவதூறாகப் பேசியுள்ளார். இது சவூதியல்ல. இங்கு இவ்வாறான ஸ்டிக்கர்கள் ஒட்டமுடியாது என்று ஸ்டிக்கரை கழற்றுமாறு அச்சுறுத்தியுள்ளார்.
ஸ்டிக்கரை அப்புறப்படுத்திய சாரதி நௌசாத் இது தொடர்பாக பொலிஸில் புகார் செய்ததையடுத்தே நேற்று முன்தினம் மாத்தளை பொலிஸில் விசாரணை நடைபெற்றது.
முச்சக்கர வண்டி சாரதியின் வாக்குமூலம் நேற்று முன்தினம் பெறப்பட்டதுடன் முச்சக்கரவண்டியிலிருந்து 4 பிள்ளைகளினதும் வாக்குமூலங்களை பெற்று கொள்வதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுகொள்ளும்படி முச்சக்கர வண்டி சாரதி நௌசாத்திற்கு மாத்தளை நகர அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.