ரணிலுக்கு ஏற்பட்ட படுதோல்வி! அரசாங்கம் நிலைத்திருக்குமா?
சிறிலங்கா பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஒன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க உள்நாட்டில் திறைசேரி...

நிதி நெருக்கடியைச் சமாளிக்க உள்நாட்டில் திறைசேரி உண்டியல் மூலம், மேலதிகமாக 400 பில்லியன் ரூபா வரையிலான கடனைத் திரட்டும் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அண்மைய வரலாற்றில் அரசாங்கமொன்று கொண்டு வந்த நிதி தொடர்பான யோசனைத் திட்டமொன்று தோற்கடிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
திறைசேரி உண்டியல் மூலம் நிதிதிரட்டுவதற்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 850 பில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக, 400 பில்லியன் ரூபாவை திரட்டுவதற்காக, உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பிரேரணையை புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தது.
இந்த திருத்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற போது அதற்கு ஆதரவாக, 31 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.
ஜேவிபி, ஜனநாயக தேசிய முன்னணி, ஆகியவற்றின் உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை.
வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கூட சபையில் இருக்கவில்லை.
அரச ஊழியர்களுக்கான சம்பளங்கள், ஓய்வூதியம் போன்றவற்றைச் செலுத்துவதற்காகவே மேலதிக கடனைத் திரட்டவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
திறைசேரி உண்டியல்களை அதிகரிக்கவே நாம் முயற்சித்தோம். எனினும் இறுதியில் மக்கள் மீது மேலும் சுமைகள் அதிகரித்துள்ளன.
மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவே எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. திறைசேரி உண்டியல்கள் பெற்றுக்கொள்வதற்கான யோசனை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கதை விரட்டியடிக்க முடியாது.
இதன் மூலம் அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
பண்டிகை முற்பணம், சம்பளங்கள் வழங்கப்படும் இவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சிகள், இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.