பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை நாளை நீக்கப்படவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு மாகாண சபையின் புதிய ஆட்சி மாற்றம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று நாளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எம்.ஜெமீல் கலந்துகொண்டு தான் நடந்து கொண்ட முறை தவறானது என ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இதனையடுத்து அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும்  உடனடியாக நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கு எதிரான தடைகளை நீக்கி அவரை மீண்டும் கட்சியில் இணைக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.பிர்தௌஸ் பலத்த எதிர்ப்பு வெளியிட்டார்.

இன்றிரவு இடம்பெற்ற கட்சியின் அதியுயர் பீட கூட்டத்தில் சுமார் 15 நிமிடங்கள் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பிர்தௌஸ், கட்சியில் ஜெமீலை மீண்டும் இணைப்பதற்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்தார். கிழக்கு முதலமைச்சராக ஏ.எம்.ஜெமீல் நியமிக்கப்படாததை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக நேற்று சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து கட்சியின் அனைத்து பதவிகளிலுமிருந்து ஜெமீல் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினால் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் . தலைவருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துடன் தனக்கு தொடர்பில்லை என இன்று மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.