யேமென் போர் நிறுத்தம் குறித்து சவுதி மன்னருடன் அதிபர் ஒபாமா தொலைபேசி உரையாடல்!!
அமெரிக்க அதிபர் ஒபாமா யேமென் போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் வெள்ளை மாளிகையில் இருந்து தொலைபேசி மூலம் அவசர ஆலோசனை நட...

![]() |
அமெரிக்க அதிபர் ஒபாமா யேமென் போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் வெள்ளை மாளிகையில் இருந்து தொலைபேசி மூலம் அவசர ஆலோசனை நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
யேமென் தலைநகர் சனாவைக் கைப்பற்றி சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகளின் வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களை சந்தித்து வரும் ஷைட்டி பிரிவின் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து வரும் ஈரானுடன் செவ்வாய்க்கிழமை அணுவாயுத ஒப்பந்தம் இறுதி செய்யப் பட்டதை அடுத்தே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இத்தொலைபேசி உரையாடலில் யேமென் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் வழிவகைகள் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தப் பட்டதாக வெள்ளை மாளிகையில் இருந்து அறிவிக்கப் பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் யேமெனில் ஐ.நா சபையின் முயற்சியால் தற்போது 6 நாட்கள் தற்காலிக யுத்த நிறுத்தம் கடைப் பிடிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் யேமெனில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஆடென் விமான நிலையத்தை சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் கைப்பற்றி சில மணித்தியாலங்களுக்குள் குறித்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலில் முக்கியமாக யுத்தத்தை உடனே நிறுத்தி, போரினால் பாதிக்கப் பட்ட யேமெனியர்களுக்கு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உதவிகள் சென்று சேர்வதற்கான வழிகள் திறக்கப் பட வேண்டும் எனவும் இப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் முன் வர வேண்டும் எனவும் அமெரிக்கத் தரப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. |