மோதல் : இது கிரிக்கெட் அல்ல...
''மஹேல நீங்கள் எங்களுக்காக துப்பாக்கிக் குண்டுகளையே தாங்கினீர்கள் உங்களுக்காக நாங்கள் சில கற்களையாவது தாங்க மாட்டோமா?...

கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.2015) அன்று கெத்தாராமை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை அடுத்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகருமான மஹேல ஜயவர்தன தனது டுவிட்டரில் 'போட்டி முடிவுகளை சிறந்த மனப்பாங்குடன் ஏற்று விளையாட்டை இரசிக்கவேண்டும்.

சில இரசிகர்களினால் இழைக்கப்பட்ட இந்தத் தவறு சகல இரசிகர்களையும் பாதிக்காது என நம்புவோமாக' என பதிவேற்றியிருந்தார்.
இதற்கு பதிலளிக்குமுகமாகவே முதற்சொன்ன வசனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார் பாகிஸ்தானியர் ஒருவர்.
அன்று நடந்தது என்ன? :
கெத்தாராம ஆர் பிரேமதாஸ கிரிக்கெட் மைதானம் பாகிஸ்தான் அணிக்கு சாதகமான மைதானம் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் அண்மைக்காலமாக இலங்கை அணியும் இந்த மைதானத்தில் வெற்றிகளை சுவீகரித்துவந்தது.
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கெத்தாராம ஆர்.பிரேமதாஸ அரங்கில் இடம்பெற்றது. அன்றைய தினம் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
பதிலுக்கு இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கெத்தாராம ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது அரங்கில் பார்வையாளர்களுக்கான "டி" பகுதியில் மோதல் இடம்பெற்றது. மது போதையில் இருந்த இருதரப்புக்கிடையிலேயே இந்த மோதல் உருவாகியுள்ளது.
இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரினால் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து அரங்கிற்கு வெளியே கடும் மோதல் இடம்பெற்றதுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன.
போதாக்குறைக்கு அரங்கிற்கு வெளியே மோதலில் ஈடுபட்டவர்கள் கையில் அகப்பட்ட பொருட்களை அரங்கை நோக்கி எறிந்தனர்.
அரங்கின் தென்கிழக்குப் பகுதியில் எண்ணிக்கைப் பலகைக்கு அருகில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த யசீர் ஷா வுக்கு அருகில் கல் ஒன்று வீழ்ந்ததை அடுத்து அவர் தனது அணித் தலைவரிடம் முறையிட்டார்.
அதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ஆடுகளத்திற்கு அருகில் அழைக்கப்பட்டனர். அதேநேரம் ஊடகவியலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள்ளும் ஒரு கல் வந்து வீழ்ந்தது.
இந்த சம்பவத்தினால் இரவு 9.30 மணி அளவில் ஆட்டம் தடைப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் 317 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த இலங்கை 33.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
வீரர்கள் அனைவரும் ஆடுகளத்திற்கு அருகே அமர்ந்திருக்கையில் போட்டி பொது மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத், வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை தங்குமறைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த நிலையில் அவசரமாக அழைக்கப்பட்ட விசேட அதிரடிப் படையினர் அரங்கிலும் அரங்கிற்கு வெளியிலும் பாதுகாப்பை உறுதி செய்ததை அடுத்து 32 நிமிட நேர தடையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்தது.
இந்த மோதலுக்கும் கிரிக்கெட் போட்டிக்கும் எவ்வித சம் பந்தமும் இல்லாத போதிலும் இலங்கை கிரிக்கெட் வரலாற் றில் அரங்கிலோ அரங்கிற்கு வெளியிலோ இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது இதுவே முதல் தடவையாகும்.
போதையில் பாதுகாப்பு அதிகாரி :
குறித்த போட்டியின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி மதுபோதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் என தகவல் கசிந்துள்ளன.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மது அருந்தி விட்டு அவர் வீடு சென்றிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலைமையை கட்டுப்படுத்திய பாதுகாப்பு தரப்பினர் :
மைதானத்தின் மேல் ஆசன வரிசையில் இருந்தவர்களும் கீழ் ஆசன வரிசைகளில் இருந்தவர்களும் போத்தல்களாலும் பொல்லுகளாலும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கெத்தாராம, மாளிகாவத்தை பிரதேசங்களிலும் பதற்றமான நிலை காணப்பட்டது.

மோதலினால் மைதானத்தின் சில மின்குமிழ்களும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்டிருப்பட்டன.
கெத்தாராம மைதான கைகலப்பினையடுத்து ஸ்தலத்துக்கு விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் உடனடியாக வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கெத்தாராம விளையாட்டு மைதானத்தில் இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த கைகலப்பில் காயமடைந்த ஆண் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நாரஹேன்பிட்டியவிலுள்ள பொலிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

'போட்டி முடிவுகளை சிறந்த மனப்பாங்குடன் ஏற்று விளையாட்டை இரசிக்கவேண்டும். சில இரசிகர்களினால் இழைக்கப்பட்ட இந்தத் தவறு சகல இரசிகர்களையும் பாதிக்காது என நம்புவோமாக'

தனிப்பட்ட சிலர் செய்த தவறுக்காக எல்லோரையும் குறைகாண முடியாது. எமது ஆதரவு இலங்கைக்கும் ரசிகர்களுக்கும் எப்போதும் இருக்கின்றது'
பொலிசார் மீது குற்றச்சாட்டு :
கெத்தாராம மைதானத்தில் இடம்பெற்ற முறுகலையடுத்து ஏற்பட்ட மோதல்களின்போது பொலிஸார் நியாயமற்றமுறையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்செயல்களில் ஈடுபடாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையே கைது செய்துள்ளதாகவும் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
மைதானத்தில் இடம்பெற்ற இருவருக்கிடையிலான முறுகலே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் இருந்த தரப்பினராலேயே பள்ளிவாசலுக்கு கல் எறியப்பட்டுள்ளது.
அத்துடன் மைதானத்திற்கு வெளியில் இருந்தவர்களால் விளையாட்டரங்கை நோக்கி கல் எறியப்பட்டுள்ளது. இவர்களை பொலிஸாரால் தடுத்துநிறுத்த முடியவில்லை.
ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்பற்ற அப்பாவி இளைஞர்களையே மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் எந்தவிதமான தகராறிலும் ஈடுபடாது கிரிக்கெட்போட்டியை பார்க்கச் சென்றவர்களே. போட்டியை கண்டுகளித்துவிட்டு வெளியில் வரும்போது அநியாயமாக இவர்கள் கைதாகியுள்ளனர்.
எனவே இது விடயத்தில் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அப்பாவி இளைஞர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இனவாத சாயம் :
கெத்தாராம விவகாரத்தை வைத்துக்கொண்டு விமல் வீரவங்ச, உதய கம்பன்பில, வாசுதேவநாணயக்கார, பொதுபலசேனா, ராவணபலய உள்ளிட்ட சிங்கள பௌத்த கடும்போக்கு சக்திகள் இதனை சிங்கள முஸ்லிம் பிரச்சினையாக பூதாகரமாக்க முற்படுகின்றன. இந்த தேர்தல் காலத்தில் இதனை மையமாக வைத்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் :
கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் பார்வையாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே அருகில் உள்ள மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசல் கல்வீச்சுக்கு இலக்காகி கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
எனினும் இச் சம்பவம் எவ்வித இன முரண்பாடுகளினதும் பின்னணியைக் கொண்டதல்ல என்றும் விளையாட்டு மைதானத்தினுள் இடம்பெற்ற கைகலப்பின்போது வீசப்பட்ட பொருட்களால் ஏற்பட்ட தற்செயலான சேதமே என்றும் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் இம்தியாஸ் அஹமட் தெரிவித்தார்.
எனினும், இதனையடுத்து விளையாட்டு மைதானத்தில் D தொகுதிக்கு அருகாமையில் பள்ளிவாசல் அமைந்துள்ளதால் அப்பகுதியை சுற்றிவர ‘நெட்” மூலம் மறைத்து பாதுகாப்பு வழங்குமாறு அப்துல் சலாம் பள்ளிவாசல் நிர்வாக சபை விளையாட்டு மைதானத்துக்குப் பொறுப்பான அதிகாரிகளை வேண்டியுள்ளது.
உலமா சபை அறிக்கை :
வெற்றியின் போதும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் நமது நாட்டின் ஐக்கியத்திற்கும் சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சகலரும் நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்தது.
19.07.2015 ஆம் திகதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சிலர் விளையாட்டு மைதானத்தில் பிழையாக நடந்து கொண்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சர்வதேச விளையாட்டுகளின் மூலம் நாடுகளுக்கிடையிலான உறவுகள் பலப்படுகின்றன.
இந்த எல்லைகளை தாண்டி பரஸ்பர வெறுப்பையும் இன முறுகல்களையும் தோற்றுவிக்கும் ஊடகங்களாக அவற்றை நாம் மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனமானதல்ல.
இது போன்ற உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது உலமாக்கள் தமது குத்பாப் பிரசங்கங்களையும் உரைகளையும் இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் மஸ்ஜித் நிர்வாகிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முஸ்லிம் தலைமைகள் கோரிக்கை :
முஸ்லிம்கள் எப்போதும் அனைத்து விடயங்களிலும் நாட்டுப் பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக பாகிஸ்தான்– இலங்கை கிரிக்கெட் போட்டியின்போது நாட்டுக்கே முதலிடம் வழங்க வேண்டும்.
இல்லையேல் அது முழு சமுதாயத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் உதவிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிமும், கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பள்ளிவாசல் நிர்வாகம், நிர்வாகத்துக்குட்பட்ட ஜமாஅத்தினர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி நிலைமையை சீராக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாளிகாவத்தை பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவிச் செயலாளர்கள் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், மௌலவி முர்சித் முளவ்பர், உறுப்பினர் இர்பான் முபீன் ஆகியோரும் கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனும் சம்பவம் நடந்த தினம் இரவு ஸ்தலத்துக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டு அங்கு சுமுக நிலைமையை உருவாக்குவதில் பங்கு கொண்டனர்.
பாக். வீரர்களின் கருத்து :
இதேவேளை, இந்த அமைதியின்மைக்கு இலங்கை கிரிக் கெட் அதிகாரிகளையோ ரசிகர்களையோ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இரசிகர்களும் குறை கூறவில்லை.
ஒரு சிறு கும்பலே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் எனவும் இலங்கை ரசிகர்களுக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் பாகிஸ்தான் வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'தனிப்பட்ட சிலர் செய்த தவறுக்காக எல்லோரையும் குறைகாண முடியாது. எமது ஆதரவு இலங்கைக்கும் ரசிகர்களுக்கும் எப்போதும் இருக்கின்றது' என பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்ற வார்த்தைகளை தனது ட்விட்டரில் முன் னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஷொயெப் அக்தார் எழுதியுள்ளார்.
எனினும், விளையாட்டுத்துறைக்கு மிகவும் பொருத்தமானதும் மதிக்கத்தக்கதுமான நாடு என பல்வேறு நாடுகளாலும் பிரமுகர்களாலும் புகழாராம் சூட்டப்பட்டுவந்த இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றமை கவலையளிக்கிறது.