பரபரப்பாகும் கொழும்பு! பாரிய நெருக்கடிக்குள் மைத்திரி
சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவியேற்றுக்கொண்டு மூன்று மாதங்கள் முடிவடைந்த போதிலும், அரசியல் ஸ்திரதன்மையே காணப்படுகிறது. பலத்த அரசியல் ...


சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவியேற்றுக்கொண்டு மூன்று மாதங்கள் முடிவடைந்த போதிலும், அரசியல் ஸ்திரதன்மையே காணப்படுகிறது.
பலத்த அரசியல் இழுபறிகளுக்கு மத்தியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய சவால்களையும், பிரச்சினைகளுகம் எதிர்நோக்கி வருகிறது.
அதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மீண்டும் அரசியலில் பிரவேசிக்க இருக்கும் செய்தி ஜனாதிபதி மைத்திரிக்கு அதீத உபாதையைக் கொடுக்கிறது எனலாம்.
இதைவிட பாராளுமன்றத்தில் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருகின்ற நடவடிக்கைகளும் மஹிந்த தரப்பால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், மைத்திரி செய்யக்கூடிய ஒரே வேலை பாராளுமன்றத்தைக் கலைத்து விடுவதாகும்.
பாராளுமன்றத்தைக் கலைப்பது மைத்திரிக்கு ஆறுதலைக் கொடுத்தாலும் பொதுத்தேர்தல் நடந்து அதில் மஹிந்த தரப்பு வெற்றியை சம்பாதித்துக் கொண்டால் நிலைமை மேன்மேலும் மோசமடையும்.
ஆக, பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்துவதோடு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணி வெற்றி சூடவேண்டிய தேவையும் உள்ளது.
இது நடக்காதவிடத்து, ஜனாதிபதி மைத்திரியின் எதிர்காலம் இடைஞ்சல்கள் நிறைந்ததாகவே இருக்கும். இந்நிலைமை தென்பகுதியைப் பொறுத்ததாக இருக்க, பொதுத் தேர்தல் நடக்கும் போது வடக்கு மாகாணத்தில் புதிய அரசியல் கட்சிகளும் களம் இறங்கும் வாய்ப்பு நிறையவே உண்டு.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் கீழ் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும். இங்குதான் ஆசனப்பகிர்வில் கருத்து முரண்பாடுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உருவாகும். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை கூட்டமைப்பின் வெற்றி என்பது தமிழரசுக் கட்சிக்கானது.
வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவதற்கு தமிழரசுக் கட்சியின் முக்கிய தூண்கள் சம்மதிக்க மாட்டா.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய கட்சிகள் முரண்பட்டுக் கொள்ளத் தலைப்படும்.
எனினும் தமிழ் மக்களின் வாக்குப்பலம் தமக்கே என்ற கர்வத்தில் தமிழரசுக் கட்சி தொடுகிலும் விட்டுக்கொடுக்காத நிலையில் புதிய அரசியல் கட்சிகள் வடக்கு மாகாணத்தில் எழுகை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
இங்கு புதிய கட்சிகள் என்பது ஏற்கெனவே இருந்த கட்சிகளின் கூட்டமைப்பாகக் கூட இருக்க முடியும்.
இங்கு வடக்கு மாகாணத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் என்பதில் தென்பகுதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் பிரசன்னமும் கனகாத்திரமாக இருக்கும் என்பதை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.
எதுவாயினும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கடுமையான பிரசாரங்கள் வாக்குப் பலத்தை அடித்து சிதறிவிடக் கூடியதாக அமையும் எனலாம்.