ராஜிவ் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை -இந்திய அரசு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது தமது கடமை என இந்திய மத்...


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது தமது கடமை என இந்திய மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட நளினி, முருகன்,சாந்தன், பேரறிவாளன், உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு கடந்த வருடம் தீர்மானித்திருந்தது.
தமிழக அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை ஆட்சேபித்து மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசாங்கம் தலையிட முடியுமா என கேள்வி எழுப்பி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தியை இலக்குவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலியாகி மேலும் 48 பேர் படுகாயமடைந்ததாக மத்திய அரசாங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது
இவர்களுக்கு நீதியைப் பெறுக்கொடுப்பதற்கான பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கு உள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்வதற்கு தமிழக அரசாங்கம் தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.