பிரான்ஸ் ஜனாதிபதிகளை உளவு பார்த்த அமெரிக்கா; விக்கிலீக்ஸின் அறிவிப்பால் பரபரப்பு
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதிகளான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிராங்கோய்ஸ் ஹொலண்டே ஆகியோரை அமெரிக்கா உளவு பார்த்தது என்று விக...


பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதிகளான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிராங்கோய்ஸ் ஹொலண்டே ஆகியோரை அமெரிக்கா உளவு பார்த்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
உயர்மட்ட ரகசிய உளவு அறிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1995 ஆம் ஆண்டு முதல் 2007 வரை சிராக் ஜனாதியாக இருந்த காலத்திலும், 2007 முதல் 2012 வரை சர்க்கோசி ஜனாதியாக இருந்த காலத்திலும், 2012 முதல் தற்போது வரை ஜனாதியாக உள்ள ஹொலண்டேவையும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் கண்காணித்தது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “பிரான்ஸ் அரசாங்கத்தில் அங்கம் வகித்த பல்வேறு அமைச்சர்களையும், அமெரிக்காவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவரையும் என்.எஸ். ஏ. கண்காணித்தது” என்று கூறியுள்ள விக்கிலீக்ஸ், இதற்கு ஆதாரமாக எலிசீ ஜனாதிபதி மாளிகையில் பணி செய்த பல்வேறு அதிகாரிகளின் தொலைபேசி எண்ணையும், ஜனாதிபதியின் நேரடி தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார சிக்கல் நிலவியது குறித்தும், கிரேக்க நாட்டின் கடன் குறித்தும், ஹொலண்டே நிர்வாகத்துக்கும் ஜெர்மனியின் மெர்கல் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள உறவு குறித்தும், பிரான்ஸ் அதிகாரிகள் நடத்திய உரையாடல்கள் மற்றும் கடிதத் தொடர்புகளையும் விக்கிலீக்ஸ் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.