புதிய அரசுடன் புலம்பெயர் வாழ் அமைப்புக்கள்
விசாரணை என்ற சொற்பதம், மிக அண்மைக்காலமாக பல சர்ச்சைகளை அரசியல் அடிப்படையில் உருவாக்கியுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு பல காரணிக...


தமிழில் நாம் விசாரணை என்று பேச்சு வழக்கத்திலோ அல்லது எழுத்திலோ குறிப்பிடும் பொழுது இச்சொற்பதம் பல விடயங்களை உள்ளடக்குகின்றது.
இதே சொற்பதத்தை, விசேடமாக சட்டத்துறையுடன் இணைத்து ஆங்கில மொழியில் பார்க்கும் பொழுது, இச்சொற்பதம் இரு வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
அதாவது, தமிழில் விசாரணை என்பதை ஆங்கிலத்தில் ‘Inquiry’ அல்லது ‘Investigation’ என குறிப்பிடப்படுவதை யாரும் மறுக்க முடியாது.
ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இவ் விசாரணை என்பது, லத்தின் மொழியின் மூலாதராத்துடன் பிரெஞ்சு மொழியுடன் கலந்து வெளிப்படுகிறது.
ஆங்கிலத்தில் விசாரணை என்பதை, ஒர் விடயத்தை வினாவுவதற்கும், விசாரிப்பதற்குமாகவுள்ளது. இச்சொற்பதங்களுடனனா இடைவெளி என்பது, சட்டத்துறையின் அடிப்படையில் பார்க்கும் பொழுது, மாபெரும் வித்தியாசங்கள் உண்டு.
எமது நடைமுறை வாழ்க்கையில், எமக்கு தெரிந்திராத விடயங்களை எமக்கு தெரிந்தவர்களிடையே அல்லது பிறரிடமோ வினாவி தெரிந்த கொள்வதையும், நாம் விசாரணை ‘Inquiry’ யின் அடிப்படையிலேயே பெற்றுக் கொள்கிறோம்.
சட்டத்துறையின் அடிப்படையில், ஆங்கிலத்தில் ‘Inquiry’ என்ற சொற்பத்தினுடைய விளக்கம் அல்லது வரவிலக்கணமாவது, ‘ஓர் குற்றச்சாட்டின் உண்மை தன்மை அறிவதற்காக அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வதாக கருதப்படுவதுடன், குற்றம் சாட்டப்பட்டவர் இதனால் ஏற்பட்ட கண்டுபிடிப்பின் விளைவுகளை, ஏற்க மறுக்கும் கட்டத்தில், அடுத்த சொற்பதமான ‘Investigation’ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இவ் விசாரணை என்பது மிகவும் தெளிவான முறையில் விபரமாக ஆதாரங்களின் அடிப்படையில் உண்மைகளை அறிவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
இவற்றின் வித்தியாசங்களை மிகவும் சுலபமாக நாம் விளங்கிகொள்ள வேண்டுமானால், ‘Inquiry’ என்ற விசாரணையை பார்க்குமிடத்தில, சில சந்தர்பங்களில் மட்டுமே குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்டுகிறது. ஆனால் விசாரணை ‘Investigation’ என்ற சொற்பதத்தை பார்க்குமிடத்தில் இது நிச்சயம் ஓர் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்டுவதை நாம் காணலாம்.
இவற்றை ஆராயுமிடத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், இவற்றின் நடவடிக்கையின் காரணிகளால், அதாவது ஆங்கிலத்தில் ‘cause of action’ அடுத்த கட்டம். நிச்சயமாக விசாரணையின் அடுத்த கட்டமாக வழக்கு என்ற நிலையை அடைகிறது.
ஓர் நல்லாட்சி ஜனநாயம் உள்ள நாட்டிலோ அல்லது சர்வதேசத்திலோ வழக்கு என்பது நடைமுறையில் ஓர் நீதிமன்றத்தில், ஓர் நீதிபதியோ அல்லது பல நீதிபதிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.
ஆகையால், இவ் விசாரணை என்ற விடயத்தையோ, சொற்பதத்தை யாரும் திரிவுபடுத்தி தமக்கு ஏற்ப பவனைக்கு உட்படுத்துவார்களானால் இதனால் பதிபக்கப்படுபவர்கள் நிச்சயம் உண்மையாக பாதிப்பிற்கு உள்ளானவர்களே. இங்கு உண்மையாக பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என குறிப்பிடுவதற்கு பல காரணங்கள் உண்டு.
இலங்கைதீவில் பிறந்த தமிழர்கள் யாவரும் உண்மையில் பாதிப்புக்குள்ளனாவர்கள் அல்ல. உண்மையில் பாதிப்பிற்கு உள்ளானவர்களினால் பலன் அடைபவர்கள் பல பிரிவுகளாளக காணப்படுகின்றனர்.
ஒரு பிரிவினர், உண்மையில் பாதிப்பிற்குள்ளானவர்கள் மீது கரிசணை உள்ளவர்கள் போல் நடடித்து, மிகப் பாரிய பலனை அடைபவர்கள். அடுத்த பிரிவினர் உண்மையில் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு தெரியாமலே அவர்களை வியாபாரம் செய்பவர்கள். மூன்றவது பிரிவினர் தங்களது சோம்பேறி அரசியலிற்கு மட்டும் இவர்களை பயன்படுத்துபவர்கள்.
தற்போதைய நிலையில், பாதிப்பிக்குள்ளானவர்களுக்கு தாராள மனம், பணம் படைத்தவர்களின் தயவே தேவையாகவுள்ளதே தவிர, அரசியல் நடிகர்களுடைய செவ்வியும் விமர்சனங்களும் அல்ல என்பதை சில்லறை அரசியல் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகையால் பாதிப்பிற்குள்ளனவர்கள் விடயங்களில் யாவரும் மிகவும் அவதானமான நிலையை கடைப்பிடிக்கத் தவறும் பட்சத்தில், வடக்கு கிழக்கில் மிஞ்சியுள்ள பிரேதேசங்களும், மக்களும் இன்னும் சில வருடங்கள், தசாப்தங்களில் சிங்கள அரசிற்கு தாரைவார்த்து கொடுக்கப்படுவார்கள் என்பதே உண்மை.
ஐ.நா.விசாரணை
திட்டமான ஆதாரம் பின்வருமாறு கூறுகிறது: (OHCHR Investigation on Sri Lanka – OISL இணையதளதிலிருந்து)
ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறையில் உண்மை கண்டறியும் செயல்முறைக்கு அமைய OISLன் நிலையும் 'நியாயமான நம்பதகமான ஆதாரங்கiள ஏற்றவையாக காணப்படும். 'நியாயமான நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையிலும் சேர்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் சம்பவம் நிர்ணயிக்கப்படும்.
இவ் திட்டமான ஆதாரங்கள் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டம் மூலம் சர்வதேச குற்றங்கள் மீறல்கள் குறித்த நீதிமன்ற விசாரணைகள் அழைப்பதற்கு போதுமானதாக இருக்கலாம்.
…………… OISL ஒருபொழுதும் இறுதியான தீர்ப்புக்கள் கிரிமினல் குற்றங்கள் மேற்கொள்ளாத போதும், இதன் மூலமாக கணிக்கப்படும் சாத்தியமான கிரிமினல் குற்றங்கள் எதிர்காலத்தில் ஓர் கிரிமினல் விசாரணைகளுக்கு வழிவகுக்கும். (சுருக்கம்)
ஐ.நா. மனித உரிமை சபையினால் சிறிலங்கா மீது மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள விசாரணையை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் காரியாலயத்தினால் சிறிலங்கா மீதான விசாரணை என (OHCHR Investigation on Sri Lanka – OISL) பெயரிடப்பட்டு, தகவல்கள் திரட்டப்பட்டு, ஆராயப்பட்டு, இதனுடைய அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளிவருமா என்ற தயக்கம் யாவருக்கும் உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சிறிலங்காவில் புதிய ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஏற்பட்ட புதிய அரசாங்கம், சர்வதேச மட்டத்தில் தமது சகல செல்வாக்குகளை பாவித்து, கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை சபையில் வெளியாகவிருந்த அறிக்கையை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை பின்போட வைத்துள்ளனார்.
இதன் காரணமாக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், உலகின் சமாதான விரும்பிகள் யாவரும் இவ் அறிக்கையை நிச்சயம் செப்டம்பரில் வெளிகொண்டு வருவதற்காக கடுமையாக உழைக்கின்றார்கள்.
ஆனால் சர்வதேச மட்டத்தில் நன்றாக ருசி கண்ட சிறிலங்கா அரசு, இவ் அறிக்கையை எதிர்வரும் செப்டம்பரில் வெளிவராது தடுத்து நிறுத்துவதற்கு, சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் கடுமையாக உழைக்கின்றனர். இம்முயற்சி வெற்றி அடைய வேண்டுமென்பதற்காக, உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் சிறிலங்கா அரசு பல தில்லு முள்ளுக்களை மேற்கொள்கின்றனர்.
1 – ஐ.நா. மனித உரிமை சபையில் உள்ள 47 அங்கத்துவ நாடுகளுடன், சிறிலங்கா அரசு மிகவும் கடுமையான பிரச்சார வேலைகளை நடத்தி வருகிறது. இவர்கள் தமது பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக தாம் உள்ளக விசாரணைகளுக்கான வேவை திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், கூடிய விரைவில் இவை நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் கூறுகின்றனர். இதற்காக சிறிலங்கா அரசின் பல முக்கியஸ்தர்கள் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளனர்.
2 - இவ்வேளையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளாரை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யுமாறும் வேண்டுகோள் விட்டு வருகின்றனர். இதனது முக்கிய நோக்கம் என்னவெனில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மூலம், தமது உள்ளக விசாரணைக்கான அங்கீகாரத்தை பெறுவதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.
3 – ஐ.நா. மனித உரிமை ஆணையாளாரின் காரியலயத்தினால் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா மீதான விசாரணைக்கு, இரவு பகலாக வேலைகளை மேற்கொண்டு, பல முக்கிய தகவல்களையும் சாட்சியங்களையும் வழங்கி வந்த புலம் பெயர் வாழ் தமிழ் மக்களிற்கும், தமக்கும் மிக நெருங்கிய உறவுகள் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சமரவீர சர்வதேச சமூதாயத்திடம் எடுத்துரைத்து வருகிறார்.
4 - சிறிலங்காவில் ஓர் உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்படுவதை, புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள, நிச்சயம் ஆதரிப்பார்கள் என்ற ஒர் கருத்தையும் சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் முன்வைக்கிறார்.
சிறிலங்காவின் இவ் வேலை திட்டத்திற்கு தென் ஆபிரிக்கா, சுவிட்சர்லாந்து, நோர்வே நாட்டை சார்ந்த எரிக் சொல்கெய்ம் போன்ற சிலர் பலிக்கடவாகியுள்ளனர்.
இவர்கள் புலம் பெயர்வாழ் தமிழ் மக்களை பற்றியோ, அல்லது அவர்களிடையே காணப்படும் அமைப்புக்கள் பற்றியோ ஆழமான தகவல்கள் கொண்டவர்கள் அல்ல.
உண்மையை கூறுவதனால் புலம் பெயர்வாழ் தமிழ் மக்களிடையே செல்வாக்குள்ள அமைப்புக்களிற்கும், அமைச்சர் சமரவீரவிற்கோ அல்லது சிறிலங்கா அரசிற்கும் இடையில் எந்தவித தொடர்போ, நட்போ அறவே கிடையாது என்பது தான் உண்மை.
இதற்காக பத்து பதினைந்து பேருடன் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஸ்டித்தவர்களையும் அமைப்பையும், புலம் பெயர்வாழ் தமிழ் மக்களிடையே செல்வாக்கு நிறைந்த அமைப்பாக நான் இங்கு கூறவில்லை. இவர்களும் தமது சுயநலத்தில் அக்கறை கொண்டவர்களே!
5 – புலம் பெயர்வாழ் மக்களிடமும் அமைப்புக்களிடமும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக, அமைச்சர் சமரவீரவும், சிறிலங்கா அரசும், வடக்கு கிழக்கு வாழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழர் கூட்டமைப்பை, அவர்களிற்கு தெரியமாலே இவர்களை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இது மிகவும் மனவேதனை தரும் விடயமாகும்.
6 – தற்போதைய சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக கூறிவரும் முக்கிய விடயம் என்னவெனில், முன்னை அரசினால் தடை செய்யப்பட்டுள்ள 424 தனிநபர் கொண்ட பட்டியலையும், அமைப்புகளையும் தாம் மறுபரிசீலனை செய்யவுள்ளனராம்.
இதனது உண்மை ரகசியம் என்னவெனில், தற்பொழுது தம்முடன் நெருங்கி வேலை செய்து வரும் புலம்பெயர் வாழ் மதில்மேல் பூனைகளான சிலரது பெயர்களையும், அமைப்பையும் இவ் பட்டியலிருந்து நீக்கும் அதேவேளை, வேறு சில அமைப்புகளையும், தனிநபர் பெயர்களையும் இப் பட்டியலில் இணைக்கவுள்ளனர் என்பதே உண்மை.
மங்கள சமரவீர, எரிக் சொல்கெய்ம்
நாம் சரித்திரங்களை ஒழுங்காக ஆராய்வோமானால், முன்னைய ஜனாதிபதி ராஜபக்சவிற்கும், தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில், நாங்கள் பாரிய வித்தியசங்களை காண முடியாது.
1994ம் ஆண்டு முதல் வேறுபட்ட அமைச்சு பதவிகளில் பணி புரிந்த மங்கள சமரவீர, வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு மட்டுமல்லாது, புலம் பெயர் வாழ் மக்களிற்கு செய்த நாசகார வேலைகள் சொல்லில் அடங்காதவை.
இவர் ஊடக தகவல் அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராகவும் சேவையாற்றிய காலங்களின் செவ்விகள், அறிக்கைகள் இன்றும் பதிவுகளில் உள்ளன. இவற்றை, தற்பொழுது இவருடன் தேன்நிலவை கழிக்கும் இவரது புதிய புலம்பெயர் வாழ் சகாக்களுக்கு இவை நிச்சயம் தெரிந்திருக்க முடியாது.
காரணம், இவர்கள் மிக அண்மையில் தமிழர்களிற்கான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதாக உட்புகுந்து, தங்களிற்கான தனிப்பட்ட புகழையும் கீர்த்தியுலுமே அக்கறை கொண்டவர்கள்.
சமரவீர ஊடக தகவல் அமைச்சராகவும், வெளிவிவகாரா அமைச்சராகவும் சேவை செய்த காலங்களில், பின்வரும் விடயங்களின் பொழுது என்ன பங்கு ஆற்றினார் என்பதை நாம் ஒரு கணம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழர் தயாக பூமி மீதான பொருளாதார தடை, பாலியல் வன்முறைக்கு ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி செல்வி கிருசாந்தி குமாரசுவாமி, மாமனிதர் கிரிமினல் சட்டத்தரணி திரு குமார் பொன்னம்பலத்தின் படுகொலை, நவாலி தேவாலயம் மீதான விமானத் தாக்குதலில் பலியான 125 அப்பாவி மக்களது சம்பவம், 700க்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட சம்பவம்,
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களது சம்பவம், மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 அரச சார்பற்ற ஊழியர்களது சம்பவம், வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள், படுகொலைகள், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வாவுனிய, மன்னார், யாழ் வளைகுடா ஆகிய பகுதிகளில் நடந்தேறிய பலவிதப்பட்ட கைதுகள், சித்திரவதைகள், கொலைகள் போன்ற விடயங்களில் இவர் என்ன அக்கறை செலுத்தியுள்ளார்?
இன்று இதே சமரவீர, இந்த பூனையும் பால் குடிக்குமோ என்பது போல், சர்வதேச சமுதாயத்திற்கும், புலம்பெயர் தேசங்களில் சரித்திரம் தெரியாத அண்மைகால தமிழ் செயற்பாட்டாளர்களிற்கும் படம் காட்டுகிறார். இதையும் ஏற்ககூடிய பைத்தியக்காரர்கள் இன்றும் தமிழரிடையே வாழ்கிறார்கள் என்பது மிகவும் வேதனை தரும் விடயமாகும்.
இதேவேளை, நோர்வே நாட்டை சார்ந்த எரிக் சொல்கெய்ம், மீண்டும் இலங்கைத்தீவு வாழ் தமிழ் மக்கள் விடயத்தில் அக்றை காட்டுவது, பல தமிழர்களுக்கு மிகவும் வியப்பாகவுள்ளது.
சுருக்கமாக கூறுவதனால், தமிழர்களது அரசியல் உரிமை போராட்டத்தை நிர்மூலமாக்குவதில் பெரிய பங்கு ஆற்றியவராக கணிக்கப்படுபவர்களில் எரிக் சொல்கெய்மும் முக்கியமானவர்.
மிக அண்மையில், இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அவர்களை சந்தித்து உரையாடிய பின்னர், இவரினால் அனுப்பப்பட்ட டுவிற்றர் தகவலை, ஓர் தேவையற்ற விடயமாகவும், இதன் மூலம் சிறிலங்கா அரசை எரிக் சொல்கெய்ம் உசார் படுத்தியுள்ளதாகவும், இத் தகவலை ஓர் திரைமறை நகர்வாகவும் தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது.
தற்போதைய யதார்த்த நிலை என்னவெனில், சிறிலங்கா அரசு சார்பாக மங்கள சமரவீரவினால் மேற்கொள்ளப்படும் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களுடனான தொடர்பு, உறவு என்பது, ஓர் மிகச் சிறிய தனிநபர் அடங்கிய குழுவுடனாது என்பதே உண்மை.
இவர்கள் புலம் பெயர் வாழ் தமிழ்மக்களிடையே எந்தவித செல்வாக்கும் அற்றவர்கள், தமது தனிப்பட்ட புகழ் கீர்த்திக்காகவே இவ்விடயங்களிற்குள் அழைய விருந்தினராக உடபுகுந்தவர்கள்.
ஆகையால் இது நிலைக்கும் விடயம் அல்ல. புலம் பெயர் தேசங்களில் மக்களிடையே செல்வாக்கு நிறைந்த அமைப்புக்கள் மிக இலகுவில் எந்த சிறிலங்க அரசுக்களையும் நம்பமாட்டார்கள். இவர்கள் மக்களிற்கும் சரித்திரத்திற்கும் முக்கிய இடம் கொடுப்பவர்கள்.
இவ் அமைப்புக்களின் பெரும்பாலனோர் புகழ் கீர்த்தியை விரும்பாதவர்கள். இவர்கள் சர்வதேச சமுதயத்தின் உதவியுடன் ஓர் வெளிப்படையான அணுகு முறைகளையும், பேச்சுவார்த்தைகளையும் மக்களிடையே செல்வாக்கு படைத்த அமைப்புகளுடன் இணைந்து கூட்டான நடவடிக்கைகளையே விரும்புபவர்கள்.
தற்போதை நிலையில், சிறிலங்கா அரசு சார்பாக அதனது வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீரவுடனான கபடம் நிறைந்த அணுகு முறைகளை மேற்கொள்பவர்கள், கடந்த ஆறு தசாப்தங்களிற்கு மேலான பேச்சுவார்த்தைகளின் சரித்திரங்களையும், ஏமாற்றங்களை கணக்கில் கொள்ளாத சுயநலவாதிகளே.
இன்று சிறிலங்காவின் நிலையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கோ, நடந்து முடிந்த போர்க்குற்றம், இனச் சுத்திகரிப்பிற்கு நீதி கண்பதற்கு ஆதராவாக எந்தனை அரசியல்வாதிகள் தெற்கில் தயாராகவுள்ளார்கள் என்பதை இவர்கள் சிந்தித்தது உண்டா?
இவர்கள் “நக்குண்டார் நாவிழந்தார்” என்ற அடைமொழிக்கு அடங்க தமது சந்தர்ப்பவாத வேலை திட்டங்களை நகர்த்துபவர்கள் என்பதே உண்மை.