புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில் கைதானவர்களிடம் விசாரணை
யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள...


யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிக்கட்டுவான் பகுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகபர்களும் நேற்று (18) பிற்பகல் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது சந்தேகநபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
புங்குடுதீவு பகுதியில் கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், காணாமற்போன உயர்தர வகுப்பு மாணவி வித்தியா, மறுநாள் பாழடைந்த காணியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
குறித்த மாணவி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.