அமைச்சர்கள் கையிலும் சிறுபான்மையினரை நீக்கிய தேசியக்கொடி.. (ராவணா பலய தேரரும் இதற்கு எதிர்ப்பு)
தேசியக்கொடியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமையை தாம் கண்டிப்பதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் தேசியக்கொடியில் உள்ள சகோதர...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_345.html
தேசியக்கொடியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமையை தாம் கண்டிப்பதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசியக்கொடியில் உள்ள சகோதரத்துவம் மற்றும் மரியாதை என்பவற்றுக்கான பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலான இரண்டு கோடுகள் அகற்றப்பட்ட நிலையில், நேற்று நாடாளுமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் இன்று கோத்தபாயவுக்கு ஆதரவாக லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் கொடிகளை பலர் ஏந்தியிருந்தனர்
இதில் முக்கிய அரசியல்வாதிகளும் உள்ளடங்கியிருந்தனர்.
எனினும் இது தமக்கு தெரியாமலேயே ஆர்ப்பாட்டத்தின்போது பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராவணா பலயவின் அழைப்பாளர் இட்டாகந்த சந்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த கொடிகள் குறித்த இடங்களுக்கு கொண்டு வரப்பட்டமைக்கும் தமது அமைப்புக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய சிங்கக் கொடி! விசாரணைகள் ஆரம்பம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவாக இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட இலங்கைத் தேசியக்கொடியை வைத்திருந்தமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோரின் கைகளிலும், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கைகளிலும், இலங்கையின் தேசியக் கொடிக்கு ஒத்ததான கொடிகள் காணப்பட்டன.
ஆனால் அக்கொடியில் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களை அடையாளப்படுத்தும் செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறப் பகுதிகள் நீக்கப்பட்டு அந்தக் கொடிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதாவது சிங்கமும் அரச மர இலையும் சிவப்பு நிறமுமே அக்கொடியில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு இலங்கையின் சிறுபான்மையினங்களையும் அடையாளப்படுத்தும் நிறங்கள் அகற்றப்பட்டமையானது திட்டமிட்ட இனவாத சிந்தனையின் வெளிப்பாடு என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத்தெரிவித்துள்ளார்கள்.
இலங்கையில் மீண்டும் இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்த இனவாதிகளை ஆட்சியில் இருத்தவே இந்த கொடி மாற்றம் செய்யும் நடவடிக்கைகள் என்று சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இதேவேளை இலங்கையின் தேசியக்கொடியில் மாற்றம் செய்வதும் அதனை அவமதிக்கும் வகையில் வெளியிடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் இவ்வாறு நீதிமன்றத்தை அவமதித்ததோடு,நாட்டின் சின்னத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியமை தொடர்வான முழுமையான விசாரணை அறிக்கை கையளிக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்