ஏமனில் இருந்து 1350 இந்தியர்கள் வெளியேறினர்: - மேலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரை வெளியேற்ற முயற்சி
உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள ஏமன் நாட்டில் இருந்து 1350 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். ஏமனில் அரசுக்கு ஆதரவாக உள்ள சவுதி அரேபிய...


இந்த துரித நடவடிக்கை மூலம் இதுவரை 1350 இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ட்ஜிபவுட்டியில் முகாமிட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள சுமார் 2 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்திய விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் அவர்களை தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஏமன் அரசை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, தினந்தோறும் இரு விமானங்கள் மூலம் இந்தியர்களை ஏற்றிச் செல்ல ஏமன் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
மேலும், அல் ஹுதைதா துறைமுகம் அருகே கடற்படைக்கு சொந்தமான டர்காஷ் கப்பல் மற்றும் இரு பயணிகள் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஏடன் துறைமுகம் பகுதியில் இருந்து சற்று தூரத்தில் உள்ள கடற்பகுதிக்குள் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். மும்பை கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏடன் துறைமுகம் பகுதியில் பயங்கர குண்டுவீச்சு தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் ஐ.என்.எஸ். மும்பை கப்பலால் துறைமுகத்துக்குள் நங்கூரம் பாய்ச்ச முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று தனது ‘டுவிட்டர்’ மூலம் தெரிவித்துள்ளார். பாய்ந்து வரும் ஏவுகணைகளை முறியடிக்கும் ஆற்றல் வாய்ந்த போர்ச் சாதனங்கள் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
எனவே, சிறிய படகுகள் மூலம் இந்தியர்களை ஏற்றிவந்து கப்பலில் ஏற்றப்படுவதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே, 325 பயணிகளுடன் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான இரு விமானங்கள் ட்ஜிபவுட்டி நகரில் இருந்து புறப்பட்டுள்ளதாகவும், ஏமன் தலைநகர் சனாவில் இருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 300 இந்தியர்கள் ட்ஜிபவுட்டியில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட தயாராக இருப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.