சீன ரெயில் நிலையத்தில் 9 பேரை கத்தியால் குத்தியவர் சுட்டுக்கொலை; மற்றொருவர் கைது
சீனாவின் குவாங்டாங் மாகாண தலைநகர் குவாங்சுவில் உள்ள ரெயில் நிலையத்தில், நேற்று காலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு காலை 8....


சீனாவின் குவாங்டாங் மாகாண தலைநகர் குவாங்சுவில் உள்ள ரெயில் நிலையத்தில், நேற்று காலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு காலை 8.18 மணியளவில் திடீரென வந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டு வந்த கத்தியால் பயணிகளை கண்மூடித்தனமாக தாக்க தொடங்கினார். இதில் எதிரே வந்த அனைவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர். உடனே மக்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் கத்திக்குத்து நடத்தியவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் குண்டு பாய்ந்து இறந்தார். மேலும் அவருடன் வந்த மற்றொருவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சீனாவின் குன்மிங் ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த இதுபோன்ற தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த ஓராண்டில் மற்றொரு கத்திக்குத்து சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது