உலகக்கிண்ண போட்டிகளில் இந்திய அணி நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும் – சேவாக்
ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண போட்டிகளில் இந்திய அணி நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும் என்று அதிரடி வீரர் விரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்து...


ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண போட்டிகளில் இந்திய அணி நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும் என்று அதிரடி வீரர் விரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“நிச்சயம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்று நான் நம்புகிறேன். அதன் பிறகு அந்தக் குறிப்பிட்ட நாளில் எப்படி ஆடுகிறோம் என்பதைப் பொறுத்து இந்திய அணியின் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். சமீபத்திய தோல்விகள் அணியை பாதிக்காது. உலகக்கிண்ண போட்டி தொடங்கிய பின்னர் ஒவ்வொருவரும் 100% பங்களிப்பு செய்வர். இதனால் சமீபத்திய தோல்விகள் தாக்கம் செலுத்த வாய்ப்பில்லை.
2003ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டிகளுக்கு முன்பு மிக மோசமான நியூசிலாந்து தொடர் நம் அணிக்கு அமைந்தது. அனைவரும் உலகக்கோப்பையில் இந்திய அணி அவ்வளவுதான் என்றனர். ஆனால் நடந்தது என்ன? நாம் இறுதிப்போட்டிக்கு சென்றோம்.
வீரர்கள் தங்களிடம் உள்ள பிரச்சினைகளைக் களைய முற்படவேண்டும். அனைவரும் உலகக்கிண்ண போட்டியில் சிறப்பாக ஆட தயாராகிக் கொள்வார்கள் என்பதை நான் உறுதிபட நம்புகிறேன். இதில் சிலர் பெரிய அளவில் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்றே நான் கருதுகிறேன்.
2011 உலகக்கிண்ண போட்டியில் மைதானங்கள் வேறு, தற்போது வேறு. மேலும், அங்கு பகுதி நேர பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்புகள் குறைவு. குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் விதிமுறைகள் மாறிய பிறகு 30 அடி வட்டத்திற்குள் எப்போதும் 5 வீரர்கள் இருந்தேயாக வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பகுதி நேர வீச்சாளரை பந்து வீச அழைப்பது கடினம். இதுதான் இந்திய அணிக்கு பலவீனமாகிறது.
இந்நிலையில் 11-வது வீரரை தேர்வு செய்வதில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள் ஏற்படுகிறது. கடந்த உலகக்கிண்ண போட்டியில் பகுதி நேர பந்துவீச்சாளராக யுவராஜ் சிங்கின் பந்துவீச்சு மிகப்பெரிய அனுகூலங்களை உண்டாக்கியது. இந்த முறை ஸ்டூவர்ட் பின்னி அல்லது ரவீந்திர ஜடேஜா இந்தப் பணியை செய்வார்கள் என்று நம்புகிறேன்.
எப்போதும் முதல் போட்டியை வென்று விட்டால் பெரிய அழுத்தத்திலிருந்து விடுபடலாம். முதல் ஒன்று அல்லது 2 போட்டிகளில் பெரிய அணிகளை வீழ்த்திவிட்டால் மற்ற அணிகளை எதிர்கொள்வதில் சிக்கல் இருக்காது. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி விட்டால் அது ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கை ஊக்குவிப்பாக அமையும்.
பாகிஸ்தான் போட்டியை இறுதிப் போட்டிக்கு முந்தைய இறுதிப் போட்டியாக நினைத்துக் கொள்ளவேண்டும். நான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றால் நான் என்னை முழுதும் தயார் படுத்திக் கொள்வேன், அது என் வாழ்நாளின் முக்கியப் போட்டியாக எப்போதும் கருதுவேன்.
நான் இப்போதும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறேன், தொடர்ந்து விளையாடுவேன், 2 ஆண்டுகளுக்கு எனக்கு வேறு சிந்தனை எதுவும் கிடையாது.” என்றார் சேவாக்.