சென்னையை சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் சிரியா எல்லையில் கைது! தீவிரவாதிகளுக்கு உதவசென்றனரா?
துருக்கி வழியாக சிரியாவுக்குள் ஊடுருவ முற்பட்ட 9 பேரிடம் பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைவதற்காக...


பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் கோயல் இதுகுறித்து கூறுகையில், "சென்னையை சேர்ந்த மகமது அப்துல் அஹத் (46), அவரது மனைவி, 5 பிள்ளைகள், தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த ஜாவித் பாஷா (24), கர்நாடக மாநிலம் ஹாசன் நகரை சேர்ந்த இப்ராஹிம் நவ்பால் (24) ஆகியோர், கடந்த மாதம் 24ம் தேதி இஸ்தான்புல் சென்றுள்ளனர். அங்கு எல்லை தாண்டிச் செல்ல முயன்றதால் 30ம்தேதி பெங்களூருக்கு அனுப்பப்பட்டனர். முகமது அப்துல் அஹத், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், அமெரிக்காவின் கென்னடி-மேற்கு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் பட்டம் பெற்றவர். 10 வருடங்களுக்கும் மேலாக, அமெரிக்காவில் பணியாற்றியவர். ஜாவீத் நவ்பால் இன்ஜினியரிங் படித்தவர். சிரியாவுக்குள் செல்ல முயன்ற காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது என்றார். விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் நோக்கத்தில் சிரியாவுக்குள் செல்ல இவர்கள் முயன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். சிரியாவுக்கு ஏன் செல்ல முயன்றீர்கள் என்ற கேள்விக்கு, அங்குள்ள சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு சேவை செய்ய சென்றதாக கூறினர். ஏன் துருக்கிக்கு விசா எடுத்துச் சென்றுவிட்டு, சிரியாவுக்குள் செல்ல முயன்றீர்கள் என்ற கேள்விக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. எனவே விசாரணையில் எங்களுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை" என்றார். சென்னையை சேர்ந்த குடும்பம் உட்பட இந்தியாவை சேர்ந்த 9 பேர் துருக்கியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.