வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாக ஏவுகணைப் பரிசோதனை செய்த தென்கொரியா!
வடகொரியாவின் பல முக்கிய பாகங்களைச் சென்று தாக்கும் வல்லமை படைத்த நீண்ட வீச்சம் கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_77.html
![]() | |
வடகொரியாவின் பல முக்கிய பாகங்களைச் சென்று தாக்கும் வல்லமை படைத்த நீண்ட வீச்சம் கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை தென்கொரியா பரிசோதித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஏவுகணையானது அண்மைக் காலமாக வடகொரியாவிடம் இருந்து அதிகரித்து வரும் இராணுவ அச்சுறுத்தலுக்குப் பதிலடியாக கடந்த 3 வருடங்களாக மேற்கொள்ளப் பட்ட கடும் முயற்சியால் உருவாக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த ஏவுகணைப் பரிசோதனையை தென்கொரிய அதிபர் பார்க் கெயுன் ஹை நேரடியாகப் பார்வையிட்டார். கடந்த மாதம் தான் வடகொரியா முதன் முறையாக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் இருந்து ஏவுகணைப் பரிசோதனை ஒன்றை நிகழ்த்தியிருந்தது. மேலும் ராக்கெட் ஒன்றில் பொருத்தக் கூடிய வகையில் மிகச் சிறிய அணுவாயுதங்களைத் தயாரிக்கக் கூடிய ஆற்றலையும் அது தற்போது கொண்டிருப்பதாகவும் அச்சுறுத்தல் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தென்கொரியா பரிசோதித்த ஏவுகணையானது குறைந்த பட்சம் 500 Km தூரம் பயணிக்கக் கூடியது என்பதுடன் அது தென்கொரிய மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள டாயேன் நகரில் இருந்து ஏவப்பட்டிருந்தது. இந்த ஏவுகணை சோதனை முயற்சி குறித்துக் கருத்துத் தெரிவித்த தென் கொரிய அதிபர் பார்க் கெயுன் ஹை தற்போது வடகொரியா அரங்கேற்றி வரும் கணிசமான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு கட்டமே இது என்றுள்ளார். மேலும் ஆத்திரமூட்டும் செய்கைகளைக் கைவிட்டு விட்டு வடகொரியா தென்கொரியாவுடன் உத்தியோக பூர்வமான பேச்சுவார்த்தைக்கு வருவதை விட அதற்கு வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது அமெரிக்காவுடன் இணைந்து தனது இராணுவ வளங்களை அதிகரித்து வரும் தென்கொரியா Kill Chain என்ற ஓர் பொறிமுறையின் அங்கமாகவே இந்த ஏவுகணைப் பரிசோதனையை நிகழ்த்தியுள்ளதுடன் தென்கொரியா மீது வடகொரியா போர் தொடுத்தால் சில நிமிடங்களுக்குள் அதன் முக்கிய பகுதிகளைத் தாக்க ஏற்றவாறு தன்னைத் தயார்ப் படுத்தியும் உள்ளது. 2 ஆம் உலகப் போரின் பின்னர் பிரிந்த வட மற்றும் தென் கொரிய தேசங்கள் இடையே பல தசாப்தங்களாகவே அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. |