சதித்திட்டம் குறித்து பீரிசிடம் நேற்று விசாரணை!
இராணுவ சூழ்ச்சித் திட்டம் குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸிடம் நேற்றுப் பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வ...

தேர்தல் நடைபெற்ற தினமன்றும் மறுநாள் அதிகாலை வேளையிலும் அலரி மாளிகையில் ஜனாதிபதியுடன் இருந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது என பீரிஸ் தெரிவித்துள்ளார். குற்ற புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிரேஸ்ட அமைச்சர்களில் ஒருவராக கடமையாற்றியுள்ளதாகவும், நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தும் மனிதாபிமான நோக்கில் தாம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட கடந்த 9ம் திகதி அதிகாலை வேளையில் அலரி மாளிகையில் ஜனாதிபதியுடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகாலை 3.30 அளவில் தாம் அலரி மாளிகைக்கு சென்றதாகவும், உத்தியோகபூர்வமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அதிகாரத்தை கையளிப்பது குறித்து ஜனாதிபதி அப்போது பிரசன்னமாகியிருந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிப் பிரமாண நிகழ்வுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த, செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் பிரசன்னமாகியிருந்த நேரத்தில் இராணுவ சூழ்ச்சி பற்றி எவரும் பேசவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் தம்மிடம் சட்டம் பயின்றவர்கள் எனவும், நாட்டின் சட்டத்தை உச்சளவில் மதிக்கும் தாம் இவ்வாறான தேச விரோத சதித் திட்டங்களில் ஈடுபட்டதில்லை. எந்தவிதமான நியாயமான ஏதுக்களும் இன்றி தம்மிடம் விசாரணை நடத்தப்பட்டமை வருத்தமளிப்பதாகவும், நல்லாட்சி பற்றி பிரச்சாரம் செய்யும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்புடையதல்ல எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.