சிறையிலிருந்து 2-வது முறையாக தப்பிய போதை பொருள் கடத்தல் மன்னன்: அதிர்ச்சியில் பொலிசார்
மெக்சிகோவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரன் ஒருவன், 2-வது முறையாக சிறையிலிருந்து தப்பியுள்ள சம்பவம் பொலிசாரை அ...


மெக்சிகோவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரன் ஒருவன், 2-வது முறையாக சிறையிலிருந்து தப்பியுள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகளவில் போதை பொருள் கடத்தல் தொழிலை செய்பவர்களில் மிக முக்கியமான குற்றவாளியாக கருதப்படுபவன் Joaquin Guzman என்ற மெக்சிகோ நாட்டை சேர்ந்த கடத்தல்காரன்.
மெக்சிகோவில் Sinaloa cartel என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பில்லியன் டொலர்கள் மதிப்பில் போதை பொருள்களை சட்டவிரோதமாக கடத்தி வந்துள்ளான்.
இந்நிலையில் கடந்த 1993ம் ஆண்டு பொலிசார் ரகசிய படையை உருவாக்கி அவனை சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போதை பொருள் கடத்திய குற்றங்களுக்காக நீதிமன்றம் அவனுக்கு 20 வருடங்களுக்கும் அதிகமான சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஆனால், சிறையில் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த அந்த கடத்தல்காரன், கடந்த 2013ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பியுள்ளான்.
மெக்சிகோ மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கிய அவனை பிடிக்க போதுமான தகவல்களை அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ பொலிசாரின் கூட்டு முயற்சியால் கடந்த 2014ம் ஆண்டு கடத்தல்காரனை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மெக்சிகோ நகருக்கு வெளியே உள்ள Altiplano என்ற சிறையில் பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவனது சிறை அறையை பரிசோதனை செய்தபோது, அவன் அங்கிருந்து தப்பியுள்ளது கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த முறையும் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பலத்த பாதுகாப்பிலிருந்து இரண்டாவது முறையாக தப்பியுள்ளானா என பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
சிறை வளாகத்தில் உள்ள ஒரு குளியல் அறையில் தான் அவனை கடைசியாக பொலிசார் பார்த்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து, கடத்தல்காரனை கண்டுபிடிக்க பொலிசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.