மியான்மரில் 153 சீனர்களுக்கு ஆயுள் தண்டனை
மியான்மரில் சட்டவிரோதமாக மரம் வெட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 153 சீனர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை தீர்ப்பளித்துள்ளது....


மியான்மரில் சட்டவிரோதமாக மரம் வெட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 153 சீனர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை தீர்ப்பளித்துள்ளது.
மியான்மர் நாட்டில் உள்ள கச்சின் மாநிலத்தில் சட்டவிரோத கடத்தல் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில் சீன நாட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த மியான்மர் நீதிமன்றம், சட்டவிரோதமாக மியான்மர் எல்லைக்குள் நுழைந்து மரம் வெட்டிய குற்றத்துக்காக 153 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக அறிவித்தது.
கைதானவரில் ஒருவர் சிறுவன் என்ற காரணத்தால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சீனா தூதரகத்தின் மூலம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லூ கேங் கூறும்போது, “மியான்மர் இந்த விவகாரத்தை தகுந்த முறையில் கையாண்டிருக்க வேண்டும். சட்டரீதியில் நியாயமான முடிவை எடுத்திருக்க வேண்டும். உடனடியாக அனைத்து சீனர்களையும் நாட்டுக்கு அனுப்பும் வழியை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.