தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் எதிர்காலத்தில் பாரிய இடைவெளி தோன்றலாம்: கலையரசன்

முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழ்மக்கள் விடயத்தில் அக்கறை இன்மையாக செயற்படுவார்களாக இருந்தால், இரண்டு சமூகங்களுக்குமிடையில் எதிர்காலத்தில் ப...

முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழ்மக்கள் விடயத்தில் அக்கறை இன்மையாக செயற்படுவார்களாக இருந்தால், இரண்டு சமூகங்களுக்குமிடையில் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளையும், இடைவெளிகளையும் தோற்றுவிக்கும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் கூறினார்.
நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட சாலம்பக்கேணியில் இருப்பதற்கு இருப்பிடம் இல்லாமல் இருந்த குடும்பத்திற்கு கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் முருகேசு விசாகன் மூலம் அவர்களுக்கான தற்காலிக இருப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அதனை அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வானது நேற்று மாலை சாலம்பக்கேணியில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன், காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.பாஸ்கரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்,

கடந்த காலங்களில் இந்த நாட்டிலே காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வடகிழக்கு தாயகத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் தமிழ் உறவுகள் தங்களது உயிரை காப்பாற்றுவதற்காக புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள்.

அவர்களில் கனடாவில் வாழும் நல்ல மனம் படைத்த முருகேசு விசாகன் போன்றோர் எமது அம்பாறை மாவட்டத்தில் மிகவும் கஸ்ட நிலையில் உள்ள மக்களை தெரிவு செய்து அவர்களுக்கு இருப்பிட வசதிகளை செய்து கொடுப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.

வடகிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எத்தனையோ எமது உறவுகள் இன்றும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள் இவர்களுக்கான எந்த உதவிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்க முன்வராமையினால் அவர்களது வாழ்க்கையில் பாரிய பின்னடைவுகளை தோற்றுவித்து இருக்கின்றது.

மக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கத்தவறினாலும் வடகிழக்கிலுள்ள தமிழர் பிரதேசங்களில் மதுபான சாலைகளை அமைப்பதற்கான அனுமதியினை கொடுக்கத்தவறவில்லை என்பது மிகவும் மனவேதனை தரும் விடயமாகும்.

2009 மே மாதம் யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னர்; வடகிழக்கு பிரதேசங்களில் பாரியளவிலான திட்டமிட்ட மதுபான சாலைகள் அமைக்கப்பட்டதோடு, போதைவஸ்த்து பாவனையும் அதிகரித்து காணப்படடுகின்றது இதற்கான காரணத்தினை ஆராய்வோமானால் எவ்வாராவது தமிழர்களின் பொருளாதாரத்தை முடக்கி அவர்களது செயற்பாட்டினை மட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதோடு எதிர்கால சமூகத்தை நன்கு திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடாகவும் இதனை பார்க்கவேண்டியுள்ளது.


இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்மக்களே அவர்கள் அன்று இருந்து இன்று வரைக்கும் ஒரு நிரந்தரமான இடதில் வாழாது அங்குமிங்குமாக அலைந்து ஏதிலிகளாக வாழ்ந்த வரலாறே இன்றும் இருந்து கொண்டு இருக்கின்றது.

இந்த நாட்டிலே ஆட்சி செய்த முன்னைய அரசாங்கமாக இருந்தாலும் சரி, தற்போதைய நல்லாட்சிக்குரிய அரசாங்கமாக இருந்தாலும் சரி, தமிழர்களுக்கான நீண்டநாள் பிரச்சனையினை தீர்த்து வைப்பதற்கு முன்வரவில்லை.

அனைத்து அரசாங்கங்களும் தங்களுடைய நிலைப்பாடுகலில் இருந்து சற்றும் மாறாத ஒரு மனப்பாங்கினையே கொண்டிருப்பதனையே காணமுடிகின்றது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிங்களுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லெண்ண சமிஞ்ஞையுடன் ஒன்றினைந்து ஆட்சியில் பங்காளிகளாக செயற்பட்டு வந்தாலும் அங்கும் மாற்றான் விரோத மனப்பாங்குடன் செயற்படுகின்ற விதத்தினை அவர்களது செயற்பாடுகள் மூலம் அவதானிக்க முடிகின்றுது.

த.தே.கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து வேறுபடுத்த வேண்டும் என்பதில் பலர் திரைமறைவில் பல சூழ்ச்சிகளை செய்து வருகின்றார்கள்.

அதனொரு கட்டமாகத்தான் இன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழ்மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல அபிவிருத்தி செய்றபாடுகளில் தடைகளை ஏற்படுத்துவதுடன்,

தமிழர் பிரதேசங்களுக்கு வரும் அபிவிருத்தி வேலைப்பாடுகளை தங்கள் பிரதேசங்களுக்கு மாற்றும் கைங்கரியங்களில் ஈடுபட்டு வருவது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றி அவர்களுக்கிடையில் மனக்கிலேசத்தினை உண்டு பண்ணும் விடயமாக காணப்படுகின்றது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளால் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு செல்லுமாக இருந்தால் கிழக்கு மாகாணசபையில் த.தே.கூட்டமைப்பு பங்காளிகளாக இருந்து செயற்படுவதில் எந்த அர்த்தமும் கிடையது.

இதனை எமது எதிர்கால அரசியல் நலன் கருதியும், தமிழ் மக்களின் தேவை கருதியும் தமிழ் தலைமைகள் புரிந்து செயற்பட வேண்டிய காலம் கனிந்துள்ளது எனவும் கூறினார்.

Related

தலைப்பு செய்தி 4370990850499096483

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item