மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக பொலிஸில் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிர்மலமான த...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_789.html
நிர்மலமான தேசத்திற்கான மக்கள் ஊடக மத்திய நிலையத்தினால் நேற்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிமால் வீரதுங்க, சட்டத்தரணி சிசிர ஜயகொடி, சட்டத்தரணி பிரேமநாத் சீ தொலவத்த ஆகியோர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியை படுகொலை செய்யும் தெளிவான திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.
மஹிந்தவின் அரசியலை மட்டுமன்றி அவரது உயிரையும் பறிக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிமால் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டை செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய முயற்சித்தல், நாட்டில் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம், கொலைக் குற்றச்சாட்டுக்களை இடைக்கிடை முன்வைத்தல், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அசாமான்ய செயற்பாடுகள், அமெரிக்கா போன்ற நீண்ட ஈழ ஆதரவு நாடுகளின் விசாரணை அதிகாரிகளை நாட்டுக்கு அழைத்தல், மஹிந்தவின் பாதுகாப்பை வேண்டுமென்றே உதாசீனம் செய்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் மஹிந்தவை படுகொலை செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்த எழுத்து மூல ஆதாரங்கள் உண்டு.
இது தொடர்பிலான எழுத்து மூல ஆவணங்கள் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்படும்.
விரைவில் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நிமால் வீரதுங்க கோரியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.