’அமெரிக்காவை விட்டு வெளியேறி கனடாவில் குடியேறுவோம்’: ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
அமெரிக்காவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை கண்டித்து நாட்டை விட்ட...


ஓரினச்சேர்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓரினச்சேர்க்கையாளர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக்கொள்ள அனுமதி அளிப்பதாக தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு சாராரிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
ஆனால், கிறிஸ்த்துவ மத பாதிரியார்கள் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு ஆசீர்வாதம் அளிக்க கூடாது என்ற நிலை உள்ளபோது, கிறிஸ்த்துவ மதம் நம்பிக்கை பெரும்பான்மையாக உள்ள அமெரிக்காவில் இந்த சட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கு பொது மக்களிடையே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
தற்போதைய சட்டப்படி அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இதே மாகாணங்களில் வசிக்கும் மக்களில் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவை விட்டு வெளியேறி கனடாவில் குடியேற உள்ளதாக அரசிற்கு மிரட்டல் விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஓரினச்சேர்க்கையாளர்கள் அமெரிக்காவை தங்களது விருப்பத்திற்கு கொண்டு வர முடியும் என்றால், அதனை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனை எதிர்க்கும் விதத்தில் இந்த நாட்டை விட்டு வெளியேறி கனடாவில் குடியேறுவது தான் ஒரே வழி என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதற்கு பதலடி கொடுத்த ஓரினச்சேர்க்கை திருமணத்தின் ஆதரவாளர்கள், அமெரிக்காவை விட்டு வெளியேறி கனடாவில் குடியேறுவோம் என்று கூறுபவர்கள், கனடாவிலும் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது என்பதை மறக்க கூடாது என்றனர்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அந்நாட்டு அரசு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கி உள்ள நிலையில், அமெரிக்காவை விட்டு வெளியேறி கனடாவில் குடியேறுவோம் என கூறிவருவது ஓரினச்சேர்க்கையாளர்களின் மீது உள்ள வெறுப்பையே காட்டுகிறது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.